இந்தியாவிலேயே முதல் முதலாக காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
காஞ்சிபுரம், நவ.17:
காஞ்சிபுரம் மாவட்டக் கூட்டுறவுத்துறை சார்பில் 70 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார்.எம்பி க.செல்வம்,எம்எல்ஏக்கள் க.சுந்தர்,கு.செல்வப்பெருந்தகை,மாவட்ட ஊராட்சிக்குழுவின் தலைவர் படப்பை ஆ.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டுறவுச்சங்க இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ வரவேற்றார். மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் மு.முருகன் திட்ட விளக்கவுரையாற்றினார்.
விழாவில் சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டுக் கேடயங்கள்,1823 பயனாளிகளுக்கு ரூ.11.15 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் ஆகியன வழங்கி குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:-
கடந்த 1904 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த காஞ்சிபுரத்தில் தான் முதல் முதலாக கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டிருக்கிறது.நகர கூட்டுறவு வங்கி காஞ்சிபுரத்திலும்,கூட்டுறவு வங்கி திருவள்ளூரிலும் தொடங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் முன்னாள் முதலமைச்சராக இருந்த அண்ணா உறுப்பினராக இருந்துள்ளார்.விவசாயிகளுக்கு நிகழாண்டில் 5047 விவசாயிகளுக்கு ரூ.37 கோடி மதிப்பில் கடன்கள் வழங்கியிருக்கிறது கூட்டுறவுத்துறை.காஞ்சிபுரத்தில் 13513 விவசாயிகளுக்கு ரூ.89.41 கோடி மதிப்பில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்துள்ளது திமுக அரசு.1451 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன்கள் ரூ.37.38கோடி வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை பணியாளர்களோடு மக்கள் நெருங்கிப் பழகும் வாய்ப்பு இருக்கிறது.எனவே கூட்டுறவுப் பணியாளர்கள் மிகுந்த பொறுப்புணர்வோடு அரசுக்கு கெட்டபெயர் வந்துவிடாமல் பணியாற்றிட வேண்டும் என்றும் அமைச்சர் பேசினார்.
விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக்குழுவின் துணைத் தலைவர் நித்யாசுகுமார்,துணை மேயர் ஆர்.குமரகுருநாதன்,காஞ்சிபுரம் ஒன்றியக்குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார்,கைத்தறித்துறை இணை இயக்குநர் கணேசன், உதவி இயக்குநர் ஸ்ரீதர் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.




No comments
Thank you for your comments