Breaking News

உரிமம் பெறாமல் தீபாவளிக்கு இனிப்புகள் விற்பனை செய்யக்கூடாது - ஆட்சியர் எச்சரிக்கை

காஞ்சிபுரம், நவ.3:

தீபாவளிப் பண்டிகையையொட்டி இனிப்பு,கார வகைகள் தயாரித்து விற்பனை செய்வோர் உரிமம் பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகையையொட்டி இனிப்பு கார வகைகளுக்கு சீட்டு நடத்துவோர் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவுப் பாதுகாப்புத்துறையினரிடம் விண்ணப்பித்து கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

ஏற்கனவே உரிமம் பெற்றிருந்தாலும் புதுப்பித்திருக்க வேண்டும்.உரிமம் இல்லாமல் தயாரிப்பது சட்டப்படி குற்றமாகும்.தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்தி சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும். 

கண்டிப்பாக கலப்படப் பொருட்கள் பயன்படுத்தவே கூடாது.இனிப்பு வகைகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக நிறமி சேர்க்கக்கூடாது.

முக்கியமாக ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை சூடுபடுத்தி கார வகைகள் தயாரிக்கக் கூடாது.தயாரிக்கும் இடம், விற்பனை செய்யும் இடம்,இருப்பு வைக்கப்படும் இடங்கள் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.ஈக்கள்,பூச்சிகள் வராமலிருக்கும் வகையில் தடுப்பு முறைகள் மேற்கொள்ள வேண்டும்.

கல்யாண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களில இனிப்பு வகைகள் தயாரித்தாலும் அதற்கும் உரிமம் பெற்றிருக்க வேண்டும். உணவை கையாள்பவர்களுக்கு கட்டாயம் மருத்துவப் பரிசோதனை செய்திருக்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களாக இருந்தால் தயாரிப்பாளர் முகவரி, உணவுப் பொருளின் பெயர், பேக்கிங் தேதி, காலாவதியாகும் நாள், சைவ, அசைவ குறியீடு ஆகியன அவசியம் இருக்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள்,கப்புகள் பயன்படுத்தினால் ரூ.2 ஆயிரம் அபராதம்.சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பேப்பரில் பொட்டலமிடக் கூடாது.மீறினால் அபராதம் விதிக்கப்படும்.

உணவுப் பொருட்கள் தொடர்பான புகார்கள் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தெரிவிக்கலாம் எனவும் ஆட்சியரது செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments