காஞ்சிபுரத்தில் லாரி மோதி இளம்பெண் சாவு - லாரி ஓட்டுநர் கைது
காஞ்சிபுரம், நவ.1:
காஞ்சிபுரம் அருகே பெரியார் நகரில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளம்பெண் மீது புதன்கிழமை கனரக லாரி மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் இந்திராகாந்தி சாலையை சேர்ந்தவர் வெற்றிச்செல்வி(22) முதுகலைப் பட்டதாரியான இவர் காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியில் உள்ள நேருயுவ கேந்திரா தொண்டு நிறுவன அமைப்பில் தற்காலிகப் பணியாளராக பணியாற்றி வந்தார்.
இவர் சைக்கிளில் பெரியார் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது வாலாஜாபாத்திலிருந்து உத்தரமேரூர் நோக்கி வந்து கொண்டிருந்த கனரக லாரி இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து அடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வெற்றிச்செல்வியின் உடலை போலீஸார் உடற்கூறு பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரான சென்னை சோழவரம் பகுதியை சேர்ந்த பார்த்தீபன்(39) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தின் போது லாரி ஓட்டுநர் பார்த்தீபன் குடிபோதையில் இருந்ததாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
No comments
Thank you for your comments