காஞ்சிபுரத்தில் சாலையில் சுற்றித் திரிந்த 8 மாடுகள் சிறைப்பிடிப்பு
காஞ்சிபுரம், நவ.22-
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரிந்த 8 மாடுகள் புதன்கிழமை பிடிக்கப்பட்டு அவையனைத்தும் திருவண்ணாமலையில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் சாலையில் மாடுகள் சுற்றித் திரிந்தன.
பலமுறை மாநகராட்சி சார்பில் எச்சரித்தும் கால் நடைகளை வளர்ப்போர் மாடுகளை சாலைகளில் தொடர்ந்து விட்டு வந்தனர். இது தொடர்பாக பல்வேறு புகார்களும் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து மாடுகளைப் பிடித்து அவற்றை கோசாலையில் ஒப்படைப்பதற்கு என குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.
இக்குழுவில் வருவாய்த்துறை, கால்நடைத்துறை, காவல்துறை, சமூக ஆர்வலர்கள் மற்றும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் இருந்து வந்தனர்.
இக்குழுவினர் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான மூங்கில் மண்டபம்,வட்டாட்சியர் அலுவலகம், காந்தி சாலை, வரதராஜப் பெருமாள் கோயில் சந்நிதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் அனாதையாக சுற்றித்திரிந்த 8 மாடுகûளைப் பிடித்து அவற்றை கால்நடைத்துறையினர் மூலம் சோதனைக்கு உட்படுத்தி திருவண்ணாமலையில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
மாநகராட்சி சுகாதார அலுவலர் அருள்நம்பி தலைமையில் சுகாதார அலுவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உட்பட பலரும் மாடுகளைப் பிடித்து கோசாலைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
படவிளக்கம் : காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் பசுமாடு ஒன்றினை பிடித்து சோதனை செய்த கால் நடை மருத்துவர் மற்றும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள்
No comments
Thank you for your comments