நடிகை கவுதமி நிலத்தை அபகரித்த 6 பேர் மீது வழக்கு
காஞ்சிபுரம் :
நிலம் மோசடி விவகாரம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் நடிகை கௌதமி ஆஜரானார்.
திரைப்பட நடிகை கௌதமி தன்னுடைய பல கோடி ரூபாய் மதிப்பிறான சொத்துக்களை மோசடி செய்து அபகரிக்கப்பட்டு விட்டதாக கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார்.
அதன்படி நடிகை கௌதமி தொடர்பான நிலமோசடி வழக்குகள் பல்வேறு இடங்களில் தீவிர படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கோட்டையூர் பகுதியில் இருந்த 1.79 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து அபகரித்துவிட்டதாக கூறிய நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கு விசாரணையில் காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் அவரது மனைவி நாச்சாள் மகள் ஆர்த்தி மற்றும் பாஸ்கரன் சதீஷ்குமார் ரமேஷ் சங்கர் ஆகிய ஆறு பேர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இந்நிலையில் வழக்கு விபரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளவும்,முதல் தகவல் அறிக்கை நகலை பெற்றுச் செல்லவும், நடிகை கௌதமிக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்து இருந்தனர்.
அதன்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரின் அழைப்பை ஏற்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் டிஎஸ்பி வெங்கடகிருஷ்ணன் முன்னிலையில் நடிகை கௌதமி ஆஜரானார்.
நடிகை கௌதமியுடன் அவரது சகோதரியும் மற்றும் வழக்கறிஞரும் உடன் வந்திருந்தனர்.
இந்நிலையில் நடிகை கௌதமி வந்திருப்பது குறித்து அறிந்து செய்தியாளர்கள் சென்றவுடன் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து காரில் வேகமாக புறப்பட்டு சென்று விட்டார்.


No comments
Thank you for your comments