3 ஆண்டாக கவர்னர் என்ன செய்து கொண்டிருந்தார்? - சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
புதுடெல்லி, நவ.20-
மசோதாதமிழக சட்டப்பேரவையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. ஆனால், 10&க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்நிலையில், சட்ட மசோதாக்களுக்கு அனுமதியளிப்பதற்கு ஆளுநருக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாவை கிடப்பில் போடுவது கவலைக்குரியது என்று தெரிவித்தது. எதுவும் செய்யாமல் கோப்புகளைக் கிடப்பில் போட முடியாது என்றும் கருத்து தெரிவித்தது.
திருப்பி அனுப்பினார்
இந்தச் சூழலில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நிலுவையில் உள்ளதாக தெரிவித்த பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களை தமிழக அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார்.
இதனையடுத்து, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கடந்த 18&ந் தேதி கூட்டப்பட்டு முதல்வர் கொண்டுவந்த அரசின் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்மூலம் அந்த 10 மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டன.
வழக்கு
இந்தநிலையில், சட்ட மசோதாக்களுக்கு அனுமதியளிப்பதற்கு ஆளுநருக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கும், மாநில அரசால் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆரீப் கான் காலதாமதப்படுத்துவது தொடர்பாக கேரள அரசு தொடர்ந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி, "தமிழக ஆளுநர் அண்மையில் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் உள்பட 15 மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளார். சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போடுவது கவலைக்குரியது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்த நிலையில், அந்த மசோதாக்களை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பி இருக்கிறார். மசோதாக்களை தேக்கிவைத்து அரசை முடக்க ஆளுநர் முயற்சிக்கிறார்" என்றார்.
முடங்கி விடும்
மாநில அரசு சார்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞரான பி.வில்சன், "ஆளுநர் இவ்வாறாக காலவரையின்றி மசோதாக்களை தேக்கிவைத்துக் கொள்ள அனுமதித்தால், மாநிலங்களில் நிர்வாகம் முடங்கிவிடும்" என்று வாதிட்டார்.
சரமாரி கேள்வி
தொடர்ந்து, ஆளுநர் ரவி தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வேங்கடரமணிக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை முன்வைத்தனர். “ஆளுநர் ரவி தரப்பில் நவம்பர் 13&ஆம் தேதி அவர் மசோதாக்களை மாநில அரசுக்கு திருப்பியனுப்பிவிட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. நாங்கள் இவ்வழக்கில் எங்கள் கருத்தை முன்வைத்தது நவம்பர் 10&ல். அதன் பின்னர் மூன்றே நாட்களில் ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார்.
ஆனால், இந்த மசோதாக்கள் 2020&ல் இருந்தே கிடப்பில் உள்ளன. அப்படியென்றால் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய பின்னர் ஆளுநர் முடிவெடுத்திருக்கிறார். மூன்றாண்டுகளாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடும் வரை ஏன் ஆளுநர்கள் காத்திருக்க வேண்டும்?” என்று வினவினர்.
மசோதா தேக்கம்
அதற்குப் பதிலளித்த அட்டர்னி ஜெனரல் வேங்கடரமணி, ”பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் ஆளுநரின் உரிமைகளைப் பறிப்பதுபோல் சட்ட மசோதா இருந்ததால், அவற்றை மறு ஆய்வு செய்யவே ஆளுநர் திருப்பி அனுப்பினார்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிமன்றம், 2020 ஜனவரியில் இருந்தே மசோதாக்கள் தேங்கியுள்ளன எனச் சுட்டிக்காட்டியது. அதற்கு அட்டர்னி ஜெனரல், ”ஆர்.என்.ரவி 2021 நவம்பரில்தான் தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றார்" என்று வாதிட்டார். பதிலுக்கு உச்ச நீதிமன்ற அமர்வு, ”இங்கே பிரச்சினை ஒரு குறிப்பிட்ட ஆளுநர் மசோதாக்களை தேக்கிவைத்தார் என்பதல்ல; ஏன் பொதுவாக ஆளுநர்கள் மசோதாக்களை தேக்கி வைக்கின்றனர் என்பதுதான்” என்று சுட்டிக் காட்டியது.
ஒத்திவைப்பு
அப்போது, ஆளுநர் திருப்பியனுப்பிய மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஆளுநரின் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு காத்திருப்பதாகக் கூறி வழக்கை டிசம்பர் 1&ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
.jpg)
No comments
Thank you for your comments