டி.டி.எப். வாசன் ஜாமீன் மனு தள்ளுபடி - யூடியூப் தளத்தை மூடிவிட்டு, மோட்டார் சைக்கிளை எரித்துவிடலாம் என ஐகோர்ட்டு நீதிபதி கருத்து
சென்னை, அக்.6-
ஜாமீன் மனு தள்ளுபடி
பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன்.கடந்த 17-ந் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் மோட்டார்சைக்கிளில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. அவரது மோட்டார்சைக்கிள் பல அடி தூரத்துக்கு பறந்து போய் விழுந்தது.
இந்தச் சம்பவத்தை அடுத்து, அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டி.டி.எப்.வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
கால்நடைகள் சென்றதால்...
இந்நிலையில், டி.டி.எப். வாசன் தரப்பில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், சாலைலயில் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தேன். அப்போது கால்நடைகள் சாலையை கடந்ததால் திடீரென பிரேக் பிடித்தேன். இதனால், தனது இருசக்கர வாகனத்தின் சக்கரம் தூக்கியது. தான் பிரேக் பிடிக்காமல் இருந்திருந்தால் கால்நடைகள் மற்றும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்.
மேலும், விபத்தில் காயமடைந்துள்ளதால், சிறையில் உரிய சிகிச்சை பெற முடியவில்லை. இதனால், தனக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் மோசமாகி வருகிறது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளது. எனவே, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். தான் ஒரு அப்பாவி, எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறேன்" என்று மனுவில் கோரியிருந்தார்.
எதிர்ப்பு
இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், "யூடியூபில் 45 லட்சம் லட்சம் பேர் மனுதாரரை பின் தொடர்கிறார்கள்.
20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கில் இரண்டு முதல் நான்கு லட்சம் ரூபாய் பாதுகாப்பு உடை அணிந்து அவர் சென்றதால், இந்த விபத்தில் இருந்து உயிர் தப்பி இருக்கலாம்.
ஆனால் இதைப்பார்த்து மற்ற இளைஞர்கள் தங்கள் பெற்றோரிடம் 2 லட்சம் ரூபாய் விலையுள்ள பைக்கை வாங்கித்தரும்படி கேட்டு, இது போன்ற அபாயகரமான சாகசங்களில் ஈடுபடுகிறார்கள். சிலர் கொள்ளைச் சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள்" என்று ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது
எரித்து விடலாம்
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள மனுதாரரின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும். அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி, ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அப்போது, வலதுகையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சைப் பெற்று வருவதால், டி.டி.எப்.வாசனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது, கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, இளைஞர்களைத் தூண்டும் வகையில் செயல்பட்ட மனுதாரர், தனது யூடியூப் தளத்தை மூடிவிட்டு, பைக்கை எரித்துவிட்டு வரும்படி கருத்து தெரிவித்தார்.
No comments
Thank you for your comments