காஞ்சிபுரத்தில் சணல் பைகள் தயாரிப்பு பயிற்சி வகுப்பு நிறைவு - பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
காஞ்சிபுரம், அக்.28:
காஞ்சிபுரம் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற சணல் பொருட்கள் வடிவமைப்பு மற்றும் பயிற்சி வகுப்பு நிறைவு பெற்றதையடுத்து சனிக்கிழமை பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மத்திய அரசின் தேசிய சணல் வாரியமும்,காஞ்சிபுரம் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனமும் இணைந்து மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 24 பேருக்கு 49 நாட்கள் சணல் பொருட்கள் வடிவமைப்பு மற்றும் பயிற்சி வகுப்பு ஆகியனவற்றை நடத்தினார்கள்.
பயிற்சியை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவிற்கு ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் சந்திரசேகர் தலைமை வகித்தார்.நிறுவனத்தின் தலைவர் ஜோ மற்றும் முதன்மை பொது மேலாளர் மோசஸ் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சணல் வாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளர்களால் பயிற்சியின் போது 60க்கும் மேற்பட்ட சணல் பை வகைகள் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு ஆகியன கற்றுத்தரப்பட்டது.பயிற்சியை முடித்தவர்களுக்கு தேசிய சணல் வாரியத்தின் சந்தைப்பிரிவு மேலாளர் ஐயப்பன் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
பின்னர் பயிற்சியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து காஞ்சி பசுமை சணல் உற்பத்தி மையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் வகையில் சணல் பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
சான்றிதழ் வழங்கும் விழாவில் தமிழ்நாடு கிராம வங்கி அலுவலர்கள் தங்கராஜன், ஆர்த்தி, கோபிநாத் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வங்கியில் தொழில் கடன் பெறுவதற்கான வழிமுறைகளையும் விளக்கினார்கள்.
No comments
Thank you for your comments