கிராம கணக்குகளில் மாறுதல் செய்யப்பட்ட பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கினார் முதலமைச்சர் - பொதுமக்களு கோரிக்கை நிறைவேற்றம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக அரசு நிலங்களில் வீடுகளைக் கட்டி குடியிருப்போருக்கு ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்கள் சிலவற்றில் கிராமக்கணக்கில் பதிவு மேற்கொள்ளப்படாமல் விடுபட்டு இருந்தது.
அவ்வாறு கிராம கணக்குகளில் பதிவு செய்யாமல் இருந்ததை கிராமக் கணக்குகளில் உரிய திருத்தங்கள் செய்து பட்டா வழங்கக்கோரி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை வரப்பெற்றிருந்தது. அந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்.
மேற்படி உத்தரவின் அடிப்படையில் கடந்த காலங்களில் பட்டா வழங்கப்பட்ட கோப்புகளை கண்டறியும் பணி கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் ஐந்து வட்டத்திற்குட்பட்ட சுமார் 227 கோப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இக்கோப்புகள் அனைத்தும் பல்வேறு அரசு புறம்போக்கு நிலங்களில் கடந்த காலங்களில் வீடுகள் கட்டப்பட்டு பட்டா வழங்கப்பட்ட நிலையில் கிராமக் கணக்குகளில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தன.
மேற்படி கண்டெடுக்கப்பட்ட கோப்புகள் கவனமுடன் பரிசீலனை செய்யப்பட்டு, கிராமக்கணக்கில் உரிய திருத்தங்கள் செய்து, அவை கணினி மயமாக்கப்பட்ட நத்தம் தரவுகளில் பதிவேற்றம் செய்யப்பட்டது, இக்கோப்புகள் மூலம் 3958 பயனாளிகள் பயனடைய உள்ளனர். இன்று 18.10.2023, செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் நடைபெற்ற கள ஆய்வில் முதலமைச்சர் திட்ட ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் முதற்கட்டமாக திருப்பெரும்புதுர் வட்டம், குன்னம் கிராமத்தைச் சார்ந்த 15 பயனாளிகளுக்கு கணினி நத்தம் பட்டா வழங்கப்பட் டது.
இந்நிகழ்வின்போது, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஆர். காந்தி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அரசு துறைச் செயலாளர்கள், துறை தலைவர்கள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர. ராகுல்நாத், இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.த.பிரபு சங்கர், இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments