அரியலூர் அருகே நாட்டு வெடி தயாரிப்பின்போது தீ விபத்து - 10 பேர் பலி -
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த வெ.விரகாலூர் கிராமத்தில் திருமழபாடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிப்பு கடை கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
இங்கு தீபாவளியையொட்டி நாட்டு வெடிகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது. இந்த கடையில் அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் வெடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் இந்த வெடி தயாரிப்பு கடையில் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து வெடி பொருட்கள் வெடித்தன.
விபத்தில் பலத்த காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தீ பரவல் காரணமாக விபத்து நடத்த பகுதியில் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்ட நிலையில், விபத்து நடத்தப் பகுதியில் உயிரிழந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேர் உயிரிழந்தனர்.
காலை 10 மணிக்கு தான் வேலை ஆட்கள் வந்ததற்கான வருகை பதிவேடு கணக்கெடுக்கப்படும். 9 மணிக்குள்ளாக விபத்து ஏற்பட்டதால், வேலைக்கு வந்தவர்கள் யார், யார் என இதுவரை தெரியவில்லை. தீ பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொக்லைன் இயந்தரம் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த வெடி விபத்தில் சுமார் ரூ.50 லட்சத்துக்கும் மேலான அளவில் வெடி பெருட்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்தில் ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதே வெடி தயாரிப்பு கடையில் கடந்தாண்டு சிறிய அளவில் வெடி விபத்து ஏற்பட்டத்தில் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பில் வெடிகள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:-
"அரியலூர் மாவட்டம், வெற்றியூர் மதுரா, விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (அக்.9) காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
விபத்து நடைபெற்ற இடத்துக்குச் சென்று, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆகிய இருவரையும் அனுப்பி வைத்துள்ளேன்.
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments