குறை தீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்
காஞ்சிபுரம்,செப்.19:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகள் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 228 மனுக்களைப் பெற்று அவை துறை சார்ந்த அலுவலர்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்தார்.
இதனைத் தொடர்ந்து ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள செயற்கை கால்,7 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.69.60லட்சம் மதிப்பிலான வங்கிக்கடன்கள், பிற்பட்டோர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.60 ஆயிரம் மதிப்பில் மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் ஆகியனவற்றையும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
கூட்டத்துக்கு எம்எல்ஏக்கள் எழிலரசன்,செல்வப்பெருந்தகை,மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சா.செல்வம் ஆகியோர் உட்பட அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



No comments
Thank you for your comments