Breaking News

விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம் - நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்க வலியுறுத்தல்...

 திருவண்ணாமலை, செப். 14-

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.


 இதில் மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் பேசியதாவது; சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரியகடமை இருக்கிறது. நீர்நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம் நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. 

நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான ஒன்றிய மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். 

மேலும் விநாயகர் சிலையை நிறுவ விரும்பும் எந்த ஒரு அமைப்பாளரும் சம்மந்தப்பட்ட காவல் துறை அலுவலர்களை அனுகியும் மற்ற சமயங்களில் வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் சார் ஆட்சியரிடம் குறைந்த பட்டசம் ஒரு மாதத்திற்கு முன்பாக ஆட்சேபனை சான்றிதழுடன் பெறப்பட்ட படிவத்தில் விண்ணப்பித்திருக்க வேண்டும். தற்காலிக கட்டமைப்புகள் தீ பாதுகாப்பு தரத்தை கடைபிடிக்கும் வகையில் தீ மற்றும் மீட்பு சேவைகள் இருக்க வேண்டும். 

அதேபோல் களிமண்ணால் செய்யப்பட்டதும், பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர்கூறுகள் வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். 

மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. 

நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் / பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயனசாயம் எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. 

சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது மாற்றாக சுற்றுச்சூழலுகுகந்த நீர் சார்ந்த / மக்கக்கூடிய / நச்சுகலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். 

விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க அனுமதிக்கப்படும். அதன்படி திருவண்ணாமலை தாமரை குளம், சிங்காரப்பேட்டை ஏரி, கோனேரிராயன் குளம், ஐந்து கண் வாராபதி, பூமா செட்டி குளம், போளுார் ஏரி, கூர் ஏரி ஆகிய பகுதியில் கரைக்கலாம்.  இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன்., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  செ.ஆ.ரிஷப், செய்யார் சார் ஆட்சியர் அனாமிகா, வருவாய் கோட்டாட்சியர்கள்  ஆர்.மந்தாகினி (திருவண்ணாமலை), ம.தனலட்சுமி (ஆரணி) மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments