Breaking News

வேலூர் -சேலம்-கோவை மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்- கோவில்களில் சிறப்பு வழிபாடு

வேலூர், செப்.18-

வேலூர், சேலம், கோவை மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



விநாயகர் சதுர்த்தி 

இந்துக்களின் முதல் கடவுளாக வணங்கப்படும் விநாயகரின் சதுர்த்தி விழா, இன்று கொண்டாடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. களிமண்ணால் செய்யபட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைத்துள்ளனர்.

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான விநாயகர் சிலை, குடைகள், வேர்க்கடலை, சோளம், கம்பு, வாழை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர். இதனால் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்ட தொடங்கி விட்டது.

வேலூர் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 1500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாநகரில் மட்டுமே 1008 சிலைகள் அமைக்க இந்து முன்னனி ஏற்பாடு செய்துள்ளது.

கண் திறப்பு நிகழ்ச்சி

இன்று அதிகாலை முதல் முழு முதற்கடவுளான விநாயகர் பெருமானுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விநாயகர் சிலைகளுக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

விநாயகருக்கு உகந்த பொருளான அருகம்புல், எருக்கன் பூ மாலை, கம்பு, சோளம், நவதானியம், கொழுக்கட்டை மற்றும் பழங்களை படையலிட்டு வழிபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கடைவீதிகளில் களிமண் விநாயகர் சிலைகள், அருகம்புல், எருக்கன்பூ மாலை, குடை மற்றும் பழ வகைகளின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

திருவண்ணாமலை மாவட் டத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் சுமார் 1,200 விநாயகர் சிலைகள்  பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதையடுத்து விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் பணி 3-ம் நாளான நாளை  20-ந் தேதி முதல் நடைபெற உள்ளன.

இதற்காக 7 நீர் நிலைகள் தேர்வு செய்யப்பட்டு சிலைகள் கரைக்கப்பட உள்ளது. போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 749 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையிலான 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, கந்திலி உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளும், மறுநாள் 21-ந் தேதி ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளது. வாணியம்பாடி பள்ளிப்பட்டு ஏரி, ஆம்பூர் ஆணை மடுகு தடுப்பணை, திருப்பத்தூர் ஆதியூர்ஏரி, நாட்ரம்பள்ளி கல்லுகுட்டை ஏரி ஆகிய 4 இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட ராணிப்பேட்டை உட்கோட்டத்தில் 252 இடங்களிலும், அரக்கோணம் உட்கோட்டத்தில் 211 இடங்களில் என மொத்தம் 463 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட போலீஸ் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்ட முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு கிரண்சுருதி தலைமையான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் சுமார் 3,902 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

பூ மார்க்கெட்

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந் தது. விநாயகர் சிலைகள் மட்டுமின்றி பூஜைக்கு உரிய பூக்கள், பழங்கள், பூசணிக்காய் மற்றும் குடை உள்ளிட்ட பூஜை பொ ருட்களை ஆர்வத்துடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.  இதனால் வேலூர் கிருபானந்தவாரியார் சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. 

வேலூர் நேதாஜி பூ மார்க்கெட்டில்  ஒரு கிலோ  முல்லை ரூ.1700-க்கும், மல்லி ரூ.1000-க்கும், ஜாதிமல்லி ரூ.2500-க்கும், கனகாம்பரம்  ரூ.1500-க்கும், சாமந்தி ரூ.340-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சேலம்-நாமக்கல்

இதேபோல் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. சேலத்தில் ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த அந்த பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக  அலைமோதியது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேட்டையில் பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் கோவிலில் கடந்த 15-ந் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு 108 வலம்புரி சங்கு மற்றும் 1008 சங்காபிஷேகமும் நடைபெற்றது.

தொடர்ந்து பஞ்சமுக ஹேரம்ப விநாயகருக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கோவை

கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக நடந்தது. கோவில்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பொள்ளாச்சி பகுதியில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்தஆண்டும் பொள்ளாச்சி பகுதியில் உள்ள பல கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில்  விழா சிறப்பாக நடந்தது.  இதையொட்டி ஹோம வழிபாடு, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பொள்ளாச்சி கடைவீதியில் உள்ளபாலகணேசர் கோவிலிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ராஜ வடிவில் சாமி காட்சியளித்தார்.

 

No comments

Thank you for your comments