Breaking News

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வரலாற்று முடிவுகள் - பிரதமர் மோடி தகவல்

 புதுடெல்லி,செப்.18-

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஒரு குறுகிய அமர்வாக இருக்கலாம், ஆனால் வரலாற்று முடிவுகளின் அடிப்படையில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, என்று பிரதமர் மோடி கூறினார்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். வருகிற   22 -ந் தேதி வரை சிறப்பு அமர்வு நடைபெறுகிறது. இன்று அவையில் உரையாற்றிய பிரதமர் பேசியதாவது-

சந்தர்ப்பம்

புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு நடவடிக்கைகள் மாற்றப்படுவதற்கு முன்பு, இந்தியாவின் 75 ஆண்டு கால நாடாளுமன்றப் பயணத்தை நினைவுகூர இன்று ஒரு சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

பழைய நாடாளுமன்ற கட்டிடம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலாக செயல்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய நாடாளுமன்றமாக அங்கீகரிக்கப்பட்டது.

மரபுகள்

75 ஆண்டுகால பயணத்தில், அனைவரது மரபுகள் மற்றும் பாரம்பரியங்களில் மிகச் சிறந்தவற்றை இந்த அவை உருவாக்கியுள்ளது. நாம் புதிய கட்டிடத்திற்கு மாறினாலும் இந்தப் பழைய கட்டிடம் வரும் தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும். இது இந்திய ஜனநாயகப் பயணத்தின் பொன்னான அத்தியாயம்.

இது நமது 75 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றின் கூட்டு முயற்சியின் விளைவாகும்.

சந்திரயான்  வெற்றி

சந்திரயான் 3-ன் வெற்றி இந்தியாவின் திறன்களின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது. இது நவீனத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நமது விஞ்ஞானிகளின் திறன் மற்றும் 140 கோடி இந்தியர்களின் வலிமையுடன் இணைந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் ஜி-20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை சேர்த்ததில் இந்தியா பெருமை கொள்கிறது என்று கூறிய அவர், அந்த இணைப்பின் உணர்ச்சிகரமான தருணத்தை நினைவு கூர்ந்தார்.

உணர்ச்சிகரமான தருணம்

புதிய வீட்டிற்கு ஒரு குடும்பம் மாறுவதை ஒப்பிட்டு பேசிய பிரதமர், பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரியாவிடை அளிப்பது மிகவும் உணர்ச்சிகரமான தருணம் என்று கூறினார். இத்தனை ஆண்டுகளில் அவையில் ஏற்பட்ட பல்வேறு சூழல்கள் மற்றும் ஏற்பட்ட பல்வேறு மனநிலைகளை எடுத்துரைத்த அவர், இந்த நினைவுகள் அவையின் அனைத்து உறுப்பினர்களின் பாரம்பரியம் என்று கூறினார்.

அதன் மகிமையும் நமக்கே சொந்தம் என்று அவர் மேலும் கூறினார். இந்த நாடாளுமன்ற மாளிகையின் 75 ஆண்டுகால வரலாற்றில் புதிய இந்தியாவை உருவாக்குவது தொடர்பான எண்ணற்ற நிகழ்வுகளை தேசம் கண்டுள்ளது என்றும், இன்று இந்தியாவின் சாதாரண குடிமகனுக்கு மரியாதையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேரு-வாஜ்பாய்

பண்டித நேரு மற்றும் லால் பகதூர் சாஸ்திரி காலத்திலிருந்து அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் வரை தங்கள் தலைமையின் கீழ் தேசத்திற்கு புதிய பாதையை வழங்கியுள்ளதாகவும், அவர்களின் சாதனைகளை முன்னிலைப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் இது என்றும் பிரதமர் கூறினார்.

அவையில் விவாதங்களை செழுமைப்படுத்தி, சாமானிய மக்களின் குரலுக்கு பலம் அளித்த சர்தார் வல்லபாய் படேல், ராம் மனோகர் லோகியா, சந்திரசேகர், லால் கிருஷ்ண அத்வானி உள்ளிட்டோரையும் அவர் குறிப்பிட்டார்.

அவையில் பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்களின் உரையை  நரேந்திர மோடி எடுத்துரைத்தார். 

இந்திரா காந்தி

நேரு, லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆகிய மூன்று பிரதமர்களை நாடு பதவியில் இருந்தபோது இழந்த வேதனையான தருணங்களையும் அவர் நினைவு கூர்ந்தார்.

பழைய கட்டிடத்திற்கு நாளை பிரியாவிடை அளிப்பதாக குறிப்பிட்ட பிரதமர், கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இணைக்கும் வாய்ப்பைப் பெறுவதால் அவையின் தற்போதைய உறுப்பினர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று சுட்டிக் காட்டினார். 

பெருமை கொள்ளும்

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னர் பிரதமரின் குறிப்பிட்டுள்ளதாவது-

ஜி 20 மாநாட்டின் வரலாறு காணாத வெற்றி, உலகெங்கிலும் உள்ள தலைவர்களை 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வரவேற்றது, சிந்தனை அமர்வுகள், உண்மையான உணர்வில் கூட்டாட்சி கட்டமைப்பின் வாழ்க்கை அனுபவம், ஜி 20 என்பதே நமது பன்முகத்தன்மை மற்றும் தனித்துவத்தின் கொண்டாட்டமாக மாறியது.

வரலாற்று முடிவு

சர்வதேச மாநாட்டு மையமான யசோபூமி நேற்று, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்தியாவின் விஸ்வகர்மா சமூகத்தின் பாரம்பரிய திறன்களைக் கொண்டாடும் விஷ்வகர்மா ஜெயந்தியும்  கொண்டாடப்பட்டது.

புதிய அணுகுமுறையுடன் கூடிய பயிற்சி, நவீனக் கருவிகள் மற்றும் நிதி மேலாண்மை ஆகியவை இந்தியாவின் விஸ்வகர்மா திறன்களை மேம்படுத்தி, நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கு பங்களிக்கின்றன. இந்நிகழ்வுகள் கொண்டாட்டம், உற்சாகம் மற்றும் நம்பிக்கையின் சூழலை உருவாக்கி, நாடு முழுவதும் உள்ள நம் அனைவரிடமும் ஒரு புதிய தன்னம்பிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில், இந்த புதிய சூழலில், இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஒரு குறுகிய அமர்வாக இருக்கலாம், ஆனால் வரலாற்று முடிவுகளின் அடிப்படையில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது இந்தியாவின் 75 ஆண்டுகால பயணத்தில் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. 75 ஆண்டுளாக இந்தப் பயணம் தற்போது அடைந்துள்ள நிலை  மிகவும் ஊக்கமளிக்கும் தருணம்.

இப்போது அந்தப் பயணத்தை முன்னெடுத்துச் செல்லும் போது, 2047 ஆம் ஆண்டில் புதிய உறுதியுடனும், புதிய ஆற்றலுடனும், புதிய நம்பிக்கையுடனும், கால எல்லைக்குள்ளும் இந்த நாட்டை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். எதிர்காலத்தில் அனைத்து முடிவுகளும் இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் எடுக்கப்படும். எனவே, இந்தக் கூட்டத்தொடர் பல வழிகளில் முக்கியமானது.

இவ்வாறு அவர ்கூறினார்.



No comments

Thank you for your comments