தொற்று நோய் தடுப்பு - களப்பணியில் விழிப்போடு செயல்பட கலெக்டர் அறிவுறுத்தல்
இந்த ஆய்வு கூட்டத்தில் ஒவ்வொரு துறையும் மேற்கொள்ள வேண்டிய நோய் தடுப்பு நடவடிக்கைகளை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது. பொது சுகாதாரத்துறைக்கு காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் தொடர்சிகிச்சை, களப்பணியில் தோழமை துறைகளை ஒருங்கிணைத்து நோய்த் தடுப்பு பணிகளை உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டது.
வீடுகளிலும், வீட்டைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் மழைநீர் தேங்காமலும், தேவையற்ற பொருட்களை அகற்றுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது. ஊரக வளர்ச்சி துறைக்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகளை ஒருங்கிணைத்து செயல்படவும், குளோரினேஷன் செய்யப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்கவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது. இந்த குடிநீரை அந்தந்த பகுதி சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்து இப்பணியை மேம்படுத்துவார்கள். அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் பாதுகாப்பான குடிநீரை உறுதிசெய்ய காலமுறைபடி குடிநீர் மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டது.
டெங்கு நோய் தடுப்பு பணிகளை துரிதப்படுத்த ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தேவையான நோய்த் தடுப்பு தற்காலிக பணியாளர்களை நியமித்து நோய்த் தடுப்பு பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. பொது இடங்களில் உள்ள குப்பைகள், தேவையற்ற டயர்கள், மழைநீர் தேங்கும் கட்டமைப்புகள் ஆகியவற்றை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது. பள்ளிக்கல்வித்துறைக்கு தினசரி வருகை தரும் குழந்தைகளுக்கு ஏதேனும் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பெற்றோருக்கு தெரிவித்து, சிகிச்சை அளிக்கவும், மேலும், பள்ளிக்கு வராத குழந்தைகளுக்கு ஏதேனும் காய்ச்சல் இருக்கிறதா என அறிந்து அவர்கள் விவரம் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடனடியாக தெரிவிக்குமாறும், அதற்கான பொறுப்பு ஆசிரியரை நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்திடவும், பாதுகாப்பான குடிநீர் வழங்கவும், அனைத்து மேல்நிலை தொட்டிகளையும் பாதுகாப்பாக கொசு புகாமல் கம்பிவலை போட்டு மூடிவைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. உணவு பாதுகாப்பு துறைக்கு உணவகங்களில் பாதுகாப்பான உணவு வழங்குவது மற்றும் கழிவுகளை முறையாக அகற்றவும், ஒவ்வொரு உணவகங்களிலும் கொசுப்புழு வளரும் இடங்கள் இல்லாமலும் வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
மருந்துக்கட்டுப்பாட்டு துறைக்கு தனியார் மருந்தகங்களில் மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகள் விநியோகம் செய்யாமல் தடுக்கவும், காலமுறைப்படி திடீர் ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
சித்தமருத்துவ துறைக்கு அனைத்து காய்ச்சல் கண்ட நபர்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கிட அறிவுறுத்தப்பட்டது. மேற்கண்ட துறைகள் அனைத்தும் தொடர்ச்சியான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு நோய்த் தொற்று பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்கிட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்), மரு.கோபிநாத், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பிரியாராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.க.சங்கீதா, இ.ஆ.ப., மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.
வெளியீடு: செய்தி மக்கள்தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments