Breaking News

கடந்த ஆண்டை விட டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

 சென்னை, செப்.22-

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். டெங்குவால் 4,227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவலை தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கான தனி மருத்துவ பிரிவும் உருவாக்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரே வாரத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்தது. இதேபோல் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 200-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

முகாம்

இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை பெசன்ட் நகர் சாலையில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது-தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. டெங்குவால் 4,227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் கொசு மற்றும் டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மூன்று மாதங்களில் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை பெசன்ட் நகரில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம்.



No comments

Thank you for your comments