முதலமைச்சர் பங்கேற்கும் உரிமைத்தொகை வழங்கும் தொடக்க விழா முன்னேற்பாடு பணி ஆய்வு
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் செப்டம்பர் 15 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விழா நடைபெற இருக்கும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை இன்று (13.09.2023) குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட பின்பு பேசியதாவது:
முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருந்த திட்டங்களில் முக்கியமான திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம். இத்திட்டத்தினை மூன்று மாதத்திற்கு முன்பாகவே முதலமைச்சர் அவர்கள் வருகிற பேரறிஞர் அண்ணா பிறந்த செப்டம்பர் 15 இல் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அவர் அறிவித்திருந்தபடி பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதியில் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்டமாக இவ்விழா நடைபெற இருக்கிறது.
முதலமைச்சர் உளுந்தையிலிருந்து காலை 8.30 மணியளவில் புறப்பட்டு, காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய பின்பு சின்ன காஞ்சிபுரம், பேரறிஞர் அண்ணா இல்லத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்துகிறார்.
தொடர்ந்து விழா மேடை அமைக்கப்பட்டுள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழா மேடைக்கு வருகை தந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 10,000 திற்கு மேற்பட்டவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் உரிமைத்தொகையினை வழங்க இருக்கிறார்.

விழா நடைபெறும் மைதானத்தில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காலையில் சிற்றுண்டியும், ஸ்நாக்ஸ் வகைகளும், குடிநீர் தொட்டி வசதிகள், கழிப்பிட வசதிகள், வண்டிகள் நிறுத்துவதற்கு தேவையான இடங்களும் செய்யப்பட்டுள்ளன.
மேலும் பயனாளிகள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விழா நிறைவுற்றவுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியினை ஏற்று கொள்கிறார் என்று மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் காவல்துறைத் தலைவர் மரு.கண்ணன், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., காவல்துறை துணை தலைவர் திருமதி.ஆர்.பொன்னி இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.எம்.சுதாகர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க. செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் திரு.ஆர்.கே.தேவேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.



No comments
Thank you for your comments