காஞ்சி வரதர் கோயிலில் தேசிகன் சுவாமிகள் மங்களாசாசனம்
படவிளக்கம் : வீதியுலா வந்த காஞ்சி வரதராஜப்பெருமாளின் தங்கப்பல்லக்கு (உள்படம்) பல்லக்கில் அஞ்சலித் திருக்கோலத்தில் எழுந்தருளிய தேசிகன் சுவாமிகள்
காஞ்சிபுரம், செப்.25:
காஞ்சிபுரம் தூப்புல் வேதாந்த தேசிகன் கோயில் புரட்டாசித் திருவிழா நிகழ் மாதம் 16 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கியது.விழாவையொட்டி தினசரி தேசிகன் சுவாமிகள் காலையில் தங்கப்பல்லக்கிலும், மாலையில் வெவ்வேறு வாகனங்களிலும் அலங்காரமாகி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இம்மாதம் 22 ஆம் தேதி நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக மற்றொரு முக்கிய நிகழ்வான தேசிகன் சுவாமிகளின் அவதார திருவோண திருநட்சத்திர திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் அவரது ஆலயத்திலிருந்து தேசிகருக்கு காலையில் தங்கப் பல்லக்கில் வருமாறு அவரது பல்லக்கினை அனுப்பி வைத்தார்.
அந்த தங்கப்பல்லக்கில் தேசிகன் சுவாமிகள் அஞ்சலித் திருக்கோலத்தில் முதலில் விளக்கொளிப் பெருமாள் கோயிலுக்கு சென்று மங்களாசாசனம் செய்தார்.
பின்னர் வீதியுலாவாக காஞ்சிபுரம் வரதர் கோயிலுக்கு எழுந்தருளி பெருந்தேவித் தாயாரையும், வரதராஜ சுவாமியையும் மங்களாசாசனம் செய்தார். தேசிகன் சுவாமிகள் பாடிய பாடல்களை பலரும் பாடினார்கள். சிறப்பு தீபாராதனைகளும், பிரசாத விநியோகமும் நடைபெற்றது.
பின்னர் வரதராஜசுவாமி தேசிகன் சுவாமிகளை வழியனுப்புவதற்காக திருமலையிலிருந்து கீழிறங்கி வந்த போது மங்கள மேள வாத்தியங்களுடன் பூச்சொரிதல் நிகழ்வும் நடைபெற்றது.
இதனையடுத்து பிரியாவிடை கொடுக்கும் விதமாக வரதராஜப் பெருமாள் தேசிகனை அவரது ஆலயத்துக்கு வழியனுப்பி வைத்தார். அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் தேசிகன் சுவாமிகள் அவரது ஆலயத்துக்கு எழுந்தருளினார். வரும் வழியில் லட்சுமி ஹயக்ரீவர் சந்நிதியிலும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
No comments
Thank you for your comments