மகளிர் உரிமைத்தொகை : கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்து இருப்பதாக பெண்கள் கருத்து - முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை :
கூட்டம்
முதல்-அமைச்சரும், மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செப்.22) தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக்குழுவின் நான்காவது கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இந்த ஆட்சி செல்ல வேண்டிய பாதையையும், செல்லும் பாதை சரியானது தானா? என்பதையும் அறிவுறுத்தும் அமைப்பாக திட்டக்குழு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதற்காக திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சனுக்கும், திட்டக்குழுவின் முழு நேர மற்றும் பகுதி நேர உறுப்பினர்களுக்கும், என்னுடைய பாராட்டுகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
வழிகாட்டிகளில் ஒருவர்
அதிலும் குறிப்பாக ஜெயரஞ்சன், அரசின் வழிகாட்டிகளில் ஒருவராகச் செயல்பட்டு வருகிறார். முக்கிய கொள்கைகளை வகுப்பதற்கு முனைப்புடன் வழிகாட்டுதல் வழங்குகிறீர்கள். முக்கியத் திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த துணை நிற்கிறீர்கள். அரசுக்கும் - மக்களுக்கும் இடைவெளி ஏற்பட்டுவிடாமல், அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பதற்கு திட்டக்குழு சீர்மிகு பணியாற்றி வருகிறது என திட்டக்குழுவின் தலைவர் என்ற முறையில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
மகளிருக்கு இலவச விடியல் பயணத் திட்டத்தை நாம் நிறைவேற்றினோம். இந்த திட்டத்தின் மூலமாக பெண்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார மாற்றங்கள், உயர்வுகள் என்னென்ன என்பதை திட்டக் குழு அறிக்கையாகக் கொடுத்த பிறகு தான் அந்த திட்டத்தின் விரிந்த பொருள் அனைவரையும் சென்றடைந்தது.
பொருளாதார சுதந்திரம்
மாதம் தோறும் 800 ரூபாய் முதல் 1200 வரை சேமிக்கிறார்கள் என்பதைவிட-பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது. சமூகத்தில் அவர்களது பங்களிப்பு அதிகமாகி இருக்கிறது.
வேலைகளுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. இதன் மூலமாக சமூக உற்பத்தியும் - உழைப்பும் உற்பத்திக் கருவிகளும் அதிகமாகி இருக்கிறது. இவை பற்றி எல்லாம் ஆங்கில ஊடகங்கள் அதிகமாக எழுதத் தொடங்கியது.
கிராமத்தில் பணப்புழக்கம்
இப்போது மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கி வருகிறோம். ஒவ்வொரு மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் கிடைப்பது எத்தகைய மகிழ்ச்சியை வழங்கி வருகிறது என்பதை ஊடகங்களில் வரும் செய்திகள் மூலமாக அறிகிறேன். அனைத்து ஊடகங்களும் பெண்களிடம் பேட்டிகள் எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். பேட்டி அளிக்கும் அனைவரும் மகிழ்ச்சியுடன்தான் பேட்டி தருகிறார்கள்.
முகநூலில் ஒருவர் எழுதி இருக்கிறார். "எங்கள் கிராமத்தில் 300 பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வந்துள்ளது. அப்படியானால் எங்கள் கிராமத்துக்குள் 3 லட்சம் ரூபாய் வந்துள்ளது. 3 லட்சம் ரூபாய் எங்கள் கிராமத்துக்குள் வந்திருப்பதன் மூலமாக எங்கள் கிராமத்தில் பணப்புழக்கம் அதிகமாகி இருக்கிறது. எங்கள் கிராமத்து வளர்ச்சிக்காக 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் எழுதி இருக்கிறார்.கிராமப்புற ஆய்வில் ஆர்வம் கொண்ட துணைத் தலைவர் ஜெயரஞ்சன் இப்படி, பல கோணங்களிலும் ஆராய்ந்து ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ சமூகத்தில் ஏற்படுத்துகிற தாக்கம் குறித்து அறிக்கைகள் கொடுக்கலாம்.
மிக மிக அவசியம்
மேலும், மிக முக்கியமான 2 வேண்டுகோள்களை உங்களிடம் வைக்க விரும்புகிறேன். பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை இருக்கிறது. மதிப்பீடு மற்றும் ஆய்வுத் துறை இருக்கிறது. இவற்றையும் இணைத்துக் கொண்டு மாநில திட்டக்குழு செயல்படவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த ஒருங்கிணைப்பு மிக மிக அவசியம். பல்வேறு ஆலோசனைகளை நீங்கள் வழங்கி வருகிறீர்கள். இவற்றை அரசுத் துறைகள் முழுமையாகவும் சரியாகவும் பயன்படுத்துகிறதா, பின்பற்றுகிறதா என்ற ஆய்வையும் நீங்கள் செய்ய வேண்டும். புள்ளி விவரங்களாக மட்டுமல்ல கள ஆய்வுகளின் மூலமாகவும் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments
Thank you for your comments