குழந்தைகளை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய பெங்களூரு இளைஞர் கைது
காஞ்சிபுரம் மாநகராட்சி பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
நெசவுத் தொழில் செய்து நடுத்தர வசதியுடன் இருக்கும் சுந்தரமூர்த்திக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
தொலைபேசி அழைப்பில் பேசிய மர்ம நபர் சுந்தரமூர்த்தியிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.
இதனை விளையாட்டாக நினைத்துக் கொண்ட சுந்தரமூர்த்தி செல்போன் இணைப்பை துண்டித்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் மறுநாள் அதே நேரத்தில் தொலைபேசியில் பேசிய மர்ம நபர் சுந்தரமூர்த்தியின் இரு குழந்தைகளையும் கடத்தி கண்டம் துண்டமாக வெட்டி கொன்று விடுவேன் என மிரட்டி பணம் கேட்டுள்ளார்.
இதனால் பயந்து போன சுந்தரமூர்த்தி செல்போன் அழைப்பு மிரட்டல் குறித்து சிவகாஞ்சி போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அவர்களின் உத்தரவின் பேரில் அதிரடியாக களமிறங்கிய சிவகாஞ்சி போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கொலை மிரட்டல் விடுத்த செல்போன் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
சைபர் கிரைம் போலீசார் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்த போது அது கர்நாடக மாநிலம் பெங்களூருவை காட்டிய நிலையில், சிவகாஞ்சி போலீஸ்கார் அந்த பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் செல்போனில் மிரட்டல் விடுத்து பேசிய மர்ம நபரான இளைஞரை கண்டுபிடித்தனர்.
இளைஞரை கண்டு பிடித்து கைது செய்த நிலையில் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் பெங்களூருவை சேர்ந்த இளைஞர் சபரிஷ் என்பதும், அவரின் குடும்பத்தினர் உயர் பதவியில் உள்ளவர்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும் தனது பண தேவைக்காக விளையாட்டாக செல்போன் எண்ணில் உள்ள வாட்ஸ் அப் டிபி புகைப்படத்தை வைத்து செல்போனில் பேசி மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பெங்களூரு இளைஞரான சபரிஷை சிவகாஞ்சி போலீசார் கைது செய்து காஞ்சிபுரம் அழைத்து வந்து இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
சமுதாயத்தில் நல்ல படிப்பறிவுடன், உயர் பதவியில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் செல்போனில் மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
No comments
Thank you for your comments