மகளிர்க்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்.15ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர்... அமைச்சர் அன்பரசன் தகவல்
காஞ்சிபுரம்,செப்.1:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்ட தொடக்க விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்விமோகன்,எம்பி.க.செல்வம்,எம்எல்ஏ க்கள் க.சுந்தர்,கு.செல்வப்பெருந்தகை,எஸ்பி.எம்.சுதாகர், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் விழா நடைபெறவுள்ள காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகளை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது-
முதலமைச்சர் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மகளிர்க்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளது.முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்.15 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் அவர்களே நேரில் வந்து அவர்களது திருக்கரங்களால் தொடக்கி வைக்க இருக்கிறார்.காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் விழா காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளதால் விழா நடைபெறும் இடத்தினை தேர்வு செய்து மேடை அமையவுள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறோம்.
முதலமைச்சரே நேரில் வந்து தொடக்கி வைக்கப்படவுள்ள இத்திட்டம் பொதுமக்களிடமும் குறிப்பாக தாய்மார்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாகவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செல்வக்குமார், மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் உட்பட ஒன்றியக் குழு தலைவர்கள்,உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments