காஞ்சிபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்-61 பேர் கைது
காஞ்சிபுரம், செப்.12:
விலைவாசி உயர்வு,வேலையில்லாமையை தடுக்கத் தவறியது,மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பது, சமையல் எரிவாயு விலையை கூட்டிய பிறகு கூட்டிய தொகையை குறைத்தது, பெட்ரோலியப் பொருட்களின் மீது 26 சதவிகித வரி உயர்வு, பால்,தயிர் மற்றும் உணவுப்பொருட்களில் கூட ஜி.எஸ்.டி.வரி விதிப்பு உள்ளிட்ட செயல்பாடுகளை செயல்படுத்தி வருவதாக பாஜக அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் காந்தி சாலையிலிருந்து பேரணியாக புறப்பட்டு ரயில் நிலைய சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் சென்று அதன் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.காஞ்சிபுரம் காந்தி சாலையில் தேரடி அருகில் பேரணி புறப்படத் தொடங்கிய போதே காவல்துறையினர் அவர்களை இடைமறித்து கைது செய்தனர்.
இப்போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் பா.கார்த்தி தலைமை வகித்தார். தொகுதி துணை செயலாளர் கே.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் த.சுந்தரமூர்த்தி, எஸ்வி சங்கர்,பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகளை விளக்கி பி.வி.சீனிவாசன், ஜே.கமலநாதன், சட்டப்பேரவை தொகுதி செயலாளர் ஏ.மூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் லாரன்ஸ் ஆகியோர் பேசினார்கள். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 25 பெண்கள் உட்பட 61 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
No comments
Thank you for your comments