காஞ்சிபுரத்தில் 15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த விநாயகர்
காஞ்சிபுரம், செப்.18:
காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகர் திருக்கோயிலில் உள்ள மூலவர் விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியையொட்டி திங்கள்கிழமை ரூ.15லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ளது ஏலேல சிங்க விநாயகர் திருக்கோயில். பழமையான இக்கோயிலில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விநாயகர் சதுர்த்தியன்று ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி மூலவர் ஏலேல சிங்க விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து ரூ.15லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன.பின்னர் ஆலய நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இது குறித்து கோயில் நிர்வாகக்குழுவின் தலைவர் சி.குப்புச்சாமி கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரூபாய் நோட்டுக்களால் அலங்கரித்து வருகிறோம்.
இந்த ஆண்டு மொத்தம் ரூ.15லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் அலங்கரித்துள்ளோம்.இவையனைத்தும் பக்தர்களிடமிருந்து சலவைத்தாள்களாக வாங்கி அலங்கரிக்கப்படும். விழா முடிந்து யாரிடம் எவ்வளவு பெறப்பட்டதோ அதை உரியவர்களிடம் அப்படியே திருப்பிக் கொடுத்து விடுகிறோம் என்றார்.
விழா ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவின் செயலாளர் டி.ஜெகன்னாதன்,துணைத்தலைவர் எம்.துரை,பொருளாளர் சீனிவாசன்,பாஸ்கரன் ஆகியோர் செய்திருந்தனர்.
படவிளக்கம் : ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகர்




No comments
Thank you for your comments