Breaking News

10 மாநகராட்சிகளில் மின்சுவர் அமைக்கப்படும்.... செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேச்சு

காஞ்சிபுரம், செப்.14:

அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் 10 மாநகராட்சிகளில் புதியதாக மின்சுவர் அமைக்கப்படும் என காஞ்சிபுரத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை பேசினார்.

படவிளக்கம் : காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் புதியதாக அமைக்கப்பட்டிருந்த மின்சுவரை ரிமோட் மூலம் இயக்கி திறந்து வைத்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்.  உடன் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

காஞ்சிபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் புதிய மின்சுவர் திறப்பு விழா நடைபெற்றது.விழாவிற்கு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார்.

எம்பி.க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன், இ.கருணாநிதி, மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தித்துறை செயலாளர் ரா.செல்வராஜ் வரவேற்று பேசினார்.

காஞ்சிபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டிருந்த மின்சுவரை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ரிமோட் மூலம் இயக்கி திறந்து வைத்தார். 

விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பேசியதாவது..


எல்இடி எனப்படும் (அகண்ட மின்திரை) மின்சுவர் வாயிலாக பொதுமக்கள் அரசின் திட்டங்களையும், அறிவிப்புகளையும் தெரிந்து கொள்வதற்காக 10 மாநகராட்சிகளில் மின்சுவரை அமைக்க முடிவு செய்துள்ளோம். முதற்கட்டமாக காஞ்சிபுரத்தில் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தில் அரசு திட்டங்களையும், அறிவிப்புகளையும் எளிமையாக புரிந்து கொள்ளவும் மின்சுவர் உதவியாக இருக்கும். 

தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயண சலுகை திட்டம்,புதுமைப்பெண் திட்டம், மகளிர்க்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் மின்சுவர் மூலமாக மக்கள் தெரிந்து கொண்டு பயன்பெறுவார்கள் எனவும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார்.

விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழுவின் தலைவர் படப்பை. ஆ.மனோகரன், ஒன்றியக்குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார் மற்றும் மாநகர் மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிறைவாக செய்தித்துறையின் இணை இயக்குநர் தமிழ்.செல்வராஜ் நன்றி கூறினார்.


No comments

Thank you for your comments