அரசு துறைகள் பணிகள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம்
காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், அரசு துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள முகாமினை இன்று (29.08.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப. காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்
திரு.க. செல்வம் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் துவக்கி வைத்து, பல்வேறு அரசு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கினை பார்வையிட்டார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறுவதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனைத்து துறைகளிலும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று நடத்தப்பட்ட முகாமில் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய் துறை, வனத்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம் மற்றும் வேளாண்மை துறைகளின் மூலம் அரங்குகள் அமைக்கப்பட்டு, துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்களுக்கு துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
தோட்டக்கலை துறை சார்பில், ட்ரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு, செயல்படுத்தி காட்டப்பட்டது. மகளிர் திட்டம் சார்பில் சிறுதானியம் மற்றும் உணவு முறைகள் காட்சியமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிறுதானியத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. வனத்துறை சார்பில் மரங்கள் மற்றும் மரங்களினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.
பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி அவர்களுக்கு தேவைப்படும் நலத்திட்டங்களை சம்பந்தப்பட்ட துறையின் முகாமில் அலுவலர்களை சந்தித்து தங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
இம்முகாமில் காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சா.செல்வகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.மலர்க்கொடி குமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு துணைத்தலைவர் திருமதி.திவ்வியப்பிரியா இளமது, வட்டார வளர்ச்சி அலுவலர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments