Breaking News

உத்தரமேரூர் கோயிலில் குடவோலை தேர்தல் முறை கல்வெட்டுக்கள்- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பார்வையிட்டார்

காஞ்சிபுரம்,  ஜூலை 26:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் உள்ள வைகுந்தப்பெருமாள் கோயில் வளாகத்தில் குடவோலை முறை மூலம் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தகுதிகள் குறித்து பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டுக்களை புதன்கிழமை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் பார்வையிட்டார்.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பேருந்து நிலையம் அருகில் பழமையும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க வைகுந்தப் பெருமாள் கோயில் உள்ளது. 

இக்கோயிலின் சுற்றுப்புற வளாகம் முழுவதும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் இருப்பதால் இக்கோயில் கல்வெட்டுக் கோயில் என்றும் பெயராகும். 

படவிளக்கம் : உத்தரமேரூர் வைகுந்தப் பெருமாள் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் பற்றிய விபரங்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு விளக்கம் அளிக்கும் தொல்லியல் ஆய்வாளர் வெற்றிச் செல்வி

இக்கோயில் சுற்றுப்புற வளாகத்தில் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதியுடையவர்கள், தகுதியற்றவர்கள் பற்றிய விபரங்கள் கடந்த 9 ஆம் நூற்றாண்டுக் காலத்திலேயே கல்வெட்டுக்களில் பொறித்து வைத்துள்ளனர்.

இது பற்றிய தகவல் அறிந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரமேரூரில் உள்ள கல்வெட்டுக் கோயிலை பார்வையிட தனது மனைவி லட்சுமியுடன் வந்திருந்தார்.

தமிழர்களின் பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டி மற்றும் வெள்ளை நிற முழுக்கை சட்டையும் அணிந்து வந்திருந்த அவருக்கு கோயில் நுழைவு வாயிலில் காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன், எஸ்பி எம்.சுதாகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கோயில் பரம்பரை அறங்காவலர் சேஷாத்திரி மற்றும் அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி ஆகியோர் ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை செய்து ஆலயத்துக்குள் அழைத்து சென்றனர்.

சுவாமி தரிசனம் செய்த பின்னர் ஆலய வளகாத்தின் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள கோயில் கல்வெட்டுக்களில் உள்ள விபரங்களை பார்வையிட்டார்.

ஆளுநருக்கு தொல்லியல் ஆய்வாளர்கள் வெற்றிச் செல்வி மற்றும் ரமேஷ் ஆகியோர் கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் வாசித்து விரிவாக விளக்கிக் கூறினார்கள்.

கடந்த 9 ஆம் நூற்றாண்டில் குடவோலை முறையில் தேர்தல் நடத்தப்பட்ட விதம், வேட்பாளருக்கு இருக்க வேண்டிய தகுதிகள், பதவியில் இருக்க வேண்டிய நாட்கள், போட்டியிட தகுதியற்றோர் போன்ற விபரங்கள் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டிருந்ததை பார்வையிட்டும், கேட்டும் தெரிந்து கொண்டார்.

இந்நிகழ்வின் போது உதவி ஆட்சியர் (பயிற்சி) அர்பித் ஜெயின், காஞ்சிபுரம் கோட்டாட்சியர் எஸ்.ரம்யா, சார் ஆட்சியர்(பயிற்சி) சங்கீதா ஆகியோரும் உடன் இருந்தனர்.


No comments

Thank you for your comments