பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேரில் ஆய்வு
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், உத்திரமேரூர் அரசு மருத்துவமனை மற்றும் மானாம்பதி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தினை இன்று (01.07.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மானாம்பதி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, அங்குள்ள நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்து நலம் விசாரித்து, மருந்தகத்தில் மருந்து இருப்பு நிலையை கேட்டறிந்தார்.
பின்னர் மானாம்பதி அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளிடம் கலந்துரையாடி, குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி அவர்களுக்கு கொடுக்கப்படும் மதிய உணவினை சாப்பிட்டு, உணவின் தரத்தை பரிசோதித்தார்.
பின்பு மானாம்பதி கண்டிகையில் ரூ.27.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டு, பணிகளை தரமாகவும், அதே சமயம் விரைவாகவும் பணிகளை முடிக்குமாறு ஒப்பந்ததாரர் மற்றும் அரசு அலுவலர்களிடம் கேட்டுக் கொண்டார்.
மேலும் அனுமந்தண்டலம் ஊராட்சியில் ரூ.10.93 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, அதன் அருகே ரூ.7.43 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் சமையல் கூடத்தை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்கும்மாறும் கேட்டுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து, இராவத்தநல்லூர் ஊராட்சியில் ரூ.11.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் கட்டடத்தை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, வேடப்பாளையத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் வட்ட செயல்முறை கிடங்கினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள பொருட்களின் இருப்பு விவரங்களை கேட்டறிந்து கிடங்கு மற்றும் அதன் சுற்றுப்புறங்களை முறையாக பராமரிக்குமாறு கேட்டு கொண்டார்.
மேலும் உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடத்தை பார்வையிட்டு, கட்டுமானப்பணியினை தரமான முறையிலும், விரைவாகவும் முடிக்கும்மாறும் ஒப்பந்ததாரர் மற்றும் அரசு அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்கள்.
இவ் ஆய்வின் போது காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சா.செல்வகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.சிவ சண்முகசுந்தரம், மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments