மாணவர்கள் கைபேசி பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள் - உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை
காஞ்சிபுரம், ஜூலை 29:
மாணவர்கள் கைபேசி பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள் என காஞ்சிபுரத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் சனிக்கிழமை பேசினார்.
காஞ்சிபுரத்தில் சுவாமி விவேகானந்தா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின் 31 வது ஆண்டு விழா அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.விழாவிற்கு பள்ளியின் தலைவர் ஜி.தாமோதரன் தலைமை வகித்தார்.பள்ளி செயலாளர் த.வித்யாசங்கர்,பொருளாளர் த.ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தாளாளர் த.ஜெயசங்கர் வரவேற்று பேசினார். முதல்வர் வி.லட்சுமி பள்ளி ஆண்டறிக்கை வாசித்தார்.விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெ.சத்ய நாராயண பிரசாத் கலந்து கொண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவியர்க்கு பரிசுகளை வழங்கி பேசியது.
பள்ளி மாணவ,மாணவியர்கள் அதிக நேரம் கைபேசிகளில் மூழ்கிக் கிடப்பதை தவிருங்கள்.சாலையை கடக்கும் போது கூட கைபேசியில் பேசிக்கொண்டே செல்வது கவலையளிக்கிறது.இது விபத்துகளுக்கும் காரணமாகி விடுகிறது. பள்ளி, கல்லூரி வாழ்க்கையை நல்ல முறையில் கொண்டாடுங்கள்.ஆனால் படிப்பில் கவனமாக இருங்கள். நல்ல நிலைமைக்கு வந்த பிறகு அதற்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களை மறந்து விடாதீர்கள். ஏழை மாணவர்களுக்கு கல்விக்காக உதவி செய்யத் தயங்காதீர்கள்.நான் நீதிபதியாக உயர்ந்து நிற்க எனது தாயாரும் ஒரு முக்கிய காரணம். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்.
பெற்றோர்களுக்கும்,முதியோர்களுக்கும் மதிப்பளிக்கத் தவறாதீர்கள்.மனித வாழ்க்கையில் நேரம் தவறாமை, ஒழுக்கம், தியாகமனப்பான்மையுடன் கூடிய கடின உழைப்பு,நேர்மையாக இருப்பது இவை மிகவும் முக்கியமானது.மாணவர்கள் எப்போதும் கோபப்படாமல் நல்ல குணமுடையவர்களாகவும் இருக்க வேண்டும்.
கோபப்படாமல் இருக்க சிறு வயதிலிருந்தே பழகிக் கொண்டால் வாழ்க்கை சுவையானதாக மாறி விடும்.தண்ணீரையும், மின்சாரத்தையும் வீணாக்காதீர்கள். தினசரி ஆங்கில செய்தித்தாளை படித்து ஆங்கில மொழியறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். ஹிந்தி படிப்பதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்ளுங்கள் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெ.சத்ய நாராயண பிரசாத் பேசினார்.நிறைவாக பள்ளியின் துணை முதல்வர் ஆர்.சீனிவாசன் நன்றி கூறினார்.பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவில் மாவட்டக் கல்வி அலுவலர் ஜெயசங்கர்,காஞ்சிபுரம் மாநகராட்சி மண்டலக்குழு உறுப்பினர் செவிலிமேடு மோகன் உட்பட மாணவ,மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
படவிளக்கம்}விழாவில் பிளஸ் 2 பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி சுவேதாவுக்கு ரொக்கப்பரிசும்,கேடயமும் பரிசாக வழங்கும் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத்
No comments
Thank you for your comments