Breaking News

சிறுபான்மையின கலைஞர்களுக்கு கடனுதவி

கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரிக்கும் சிறுபான்மையின கலைஞர்களுக்கு கடனுதவி வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய இஸ்லாமியர்கள். கிறித்தவர்கள். சீக்கியர்கள், புத்த மதத்தினர். சமண மதத்தினர் மற்றும் பார்சிக்கள் போன்ற சிறுபான்மையினத்தைச் சேர்ந்த கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் செய்யும் ஏழ்மையான கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதி கழகம் மூலம் செயல்பாட்டில் உள்ள விராசத் (VIRASAT) திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. 

திட்ட வரம்பு 1ன் படி ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.10,00,000 கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான ஆண்டு வருமான வரம்பு கிராமப்புறமாயிருப்பின் ரூ.98,000/- மற்றும் நகர்ப்புறமாயிருப்பின் ரூ.1,20,000/- இருத்தல் வேண்டும். ஆண்டு வட்டி விகிதம் பெண்களுக்கு 4% மற்றும் ஆண்களுக்கு 5%  கணக்கிடப்பட்டு 5 ஆண்டுக்குள் கடன் தொகையை திரும்ப செலுத்த வேண்டும். 

மேற்படி கைவினைக்கலைஞர்களுக்கான கடனுதவி திட்ட வரம்பு 1 ன் கீழ் பயன்பெற முடியாத மற்றும்  ஆண்டு வருமானம் ஆண்டொன்றுக்கு கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.8,00,000க்கு மிகாமல் உள்ள கைவினை கலைஞர்களுக்கு, அதிகபட்சமாக ரூ.10,00,000 கடன் வழங்கப்படும். ஆண்டு வட்டி விகிதம் பெண்களுக்கு 5% மற்றும் ஆண்களுக்கு 6% கணக்கிடப்படும் 5 ஆண்டுக்குள் கடன் தொகையை திரும்ப செலுத்த வேண்டும்.

எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி, அனைத்து நகர கூட்டுறவு வங்கிகள் / சங்கங்கள் மற்றும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தகுதியான விண்ணப்பங்கள் டாம்கோ நிறுவனத்திற்கு பரிந்துரை செய்யப்படும். எனவே தகுதியுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments