மொடக்குறிச்சி ஊராட்சி பகுதியில் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் ரூ.5.05 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி, புஞ்சை காளமங்கலம், கணபதிபாளையம், ஈஞ்சம்பள்ளி, எழுமாத்தூர் மற்றும் முத்துக்கவுண்டம்பாளையம் ஆகிய கிராம ஊராட்சி பகுதிகளில் ரூ.5.05 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா இஆப., அவர்கள் 31.05.2023 அன்று செய்தியாளர் பயணத்தின் போது நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 225 கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, 31.05.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், மொடக்குறிச்சி ஊராட்சி லக்காபுரம் பகுதியில் விரிவான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.29.82 இலட்சம் மதிப்பீட்டில் நகராட்சி நகர் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியினையும், பள்ளி வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.5.90 இலட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் அமைக்கும் பணியினையும், மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட மாதேஸ்வரன் நகர் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.49.64 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வசதியுடன் கூடிய தார்சாலை அமைக்கும் பணியினையும், மொடக்குறிச்சி பகுதியில் ஒதுக்கப்பட்ட வருவாய் திட்டப் பகுதி திட்டத்தின் கீழ், ரூ.307.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தினையும், மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட பெருமாபாளையம் பகுதியில் நபார்டு திட்டத்தின கீழ், ரூ.96.00 இலட்சம் மதிப்பீட்டில் தூரபாளையம் அங்கன்வாடி முதல் பெருமாபாளையம் வரை தார்சாலை அமைக்கும் பணியினையும், புஞ்சை காளமங்கலம் ஊராட்சி சின்னம்மாபுரம் பகுதியில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.7.10 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகம் அமைக்கும் பணியினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் மணல், செங்கல், சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் தரத்தினையும் ஆய்வு செய்தார்.
மேலும், முத்துக்கவுண்டம்பாளையம் ஊராட்சி பகுதியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், ரூ.9.59 இலட்சம் மதிப்பீட்டில் பாரதி நகர் விநாயகர் கோயில் முதல் முருகேசன் வீடு வரை இரண்டு மெட்டல் அமைத்து தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வையிட்டு தார் சாலையின் தரத்தினையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மற்றும் மருந்துகளின் இருப்புகள் குறித்தும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார். மேலும், சிகிச்சைக்காக வருகை புரிந்துள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.
மேலும், மொடக்குறிச்சி கால்நடை மருத்துவமனையினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருந்துகளின் இருப்புகள் குறித்தும் கால்நடை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, மொடக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலகத்தினை பார்வையிட்டு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். மேலும், ஈஞ்சம்பள்ளி ஊராட்சி ஈஞ்சம்பள்ளி, முத்துகவுண்டம்பாளையம், ஆதிதிராவிடர் காலனியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளையும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அங்கு அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினையும் பார்வையிட்டு குளோரின் பயன்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும், நஞ்சை ஊத்துக்குளி, ஐங்கரன் வலசு பகுதியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.



No comments
Thank you for your comments