Breaking News

உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் - பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள்

காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறுவு மைய கூட்டரங்கில், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் கலந்து கொண்டு பொது மக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பயனாளிகளுக்கு ரூ. 3,25, 64, 200/- (ரூபாய் மூன்று கோடியே இருபத்தி ஐந்து லட்சத்து அறுபத்தி நான்காயிரத்து இருநூறு மட்டும்) மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் தீர்த்திட வேண்டும் என்ற நல்ல நோக்கில் வாரத்திற்கு ஒரு நாள் செவ்வாய்கிழமை அன்று மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களின் முன்னிலையில் மாவட்டத்தில் உள்ள பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தருகின்ற கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு, துறை வாரியாக பிரித்து அம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் இன்று (06.06.2023) மனுக்கள் பெறப்படுகின்றது. 

இதற்கென்று தனியாக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, வழங்கப்பட்ட மனுக்களை முறைப்படுத்தி அதனை முறையே கணினியில் பதிவிறக்கம் செய்யப்படவேண்டும். இம்மனுக்கள் மீது வாரம்தோறும் ஆய்வு மேற்கொண்டு, தீர்க்க கூடிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் நிதி ஆதாரத்துடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று விரைந்து முடிக்கப்பட்டு வருகிறது. 

இன்று நடைபெற்ற மனுக்கள் பெறும் நிகழ்வில், பெறப்பட்ட மனுக்களில் முக்கியமாக சாலை வசதிகள், இடுக்காடுகளுக்கு சரியான அடிப்படை வசதிகள், வீட்டுமனை பட்டாக்கள் மேலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டாக்களை அடங்கலில் பதிய வேண்டும். குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர்வரப்பட்டு சரி செய்யவேண்டும்,  மின் கம்பங்களை மாற்றப்பட வேண்டும்,  சில பகுதிகளில் மின்சாரம் குறைந்த மின்அழுத்த திறன் கொண்டு இருக்கிறது அதனை சரி செய்யப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் இன்று பெறப்பட்டுள்ளது.

நமக்கு தெரியாத சில பிரச்சனைகள் மற்றும் மக்களின் தேவைகளை இன்று மனுக்களாக வழங்கப்பட்டுள்ளது. அம்மனுக்கள்மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, தேவை ஏற்படும் மனுக்களுக்கு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அப்பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய்த்துறை சார்பில், திருப்பெரும்புதூர் வட்டம், மதுரமங்கலம் (ஆ) கிராமத்தை சார்ந்த 30 பயனாளிகளுக்கும் மற்றும்  காஞ்சிபுரம் வட்டம் சின்னயங்குளம் கிராமத்தை சார்ந்த 15  பயனாளிகளுக்கும்  ரூ.65.31 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டது. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் உத்திரமேரூர் ஒன்றியத்தை சார்ந்த 9 பயனாளிகளுக்கு ரூ.21.60 இலட்சம் மதிப்பீட்டில் பிரதம மந்திரி வீடு கட்டுவதற்கான ஒதுக்கீடு ஆணைகளும், மாவட்ட தொழில் மையம் சார்பில் பல்வேறு தொழில்கள் தொடங்குவதற்கு 6 பயனாளிகளுக்கு ரூ.5.56 இலட்சம் மதிப்பிலான வங்கி கடன் தொகைக்கான ஆணைகளும் வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ரூ.10.01 இலட்சம் மதிப்பீட்டில் 7 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தையல் இயந்திரமும், 9 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளும், கூட்டுறவுத் துறை சார்பில், ரூ.1,34,69,200/- மதிப்பிலான 16 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, மகளிர் சுய உதவி குழு கடன்தொகையும், தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார பணி சார்பில், ரூ.88,30,000/-  மதிப்பிலான சுய உதவி குழு கடன்தொகையும் வழங்கப்பட்டது. மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ரூ.16,332/- மதிப்பிலான வேளாண்மை இடுபொருட்கள் 3 பயனாளிகளுக்கும் மற்றும் வேளாண் இயந்திரம் 2 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது. மேலும்  கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த செயலாக்க வழிமுறைகள் அடங்கிய கையேடு உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுத்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வில் சிறப்பாக பணியாற்றிய தி/ள். ஜேப்பியர் இண்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, குன்னம் கிராமம் மற்றும் தி/ள். லிட்டில் பிளவர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி குன்றத்தூர் ஆகியோர்க்கு 2022-2023க்கான பசுமை சாம்பியன் விருதும், ரூ.1 இலட்சத்துக்கான காசோலையும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், காஞ்சிபுரம்  சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.செல்வப் பெருந்தகை, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சா.செல்வகுமார், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை திரு.ஆ.மனோகரன், மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநகராட்சி துணை மேயர் திரு.குமரகுருநாதன்  வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் திரு.தேவேந்திரன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.   

No comments

Thank you for your comments