மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிபவர்கள் தமிழக அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம்...
மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிபவர்கள் தமிழக அரசின் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளதாவது,
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வு குழு மூலம் தேர்வு செய்து, அவர்களை சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15-ந் தேதியன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஊக்குவித்து கௌரவிக்கப்படுவதால், அதனை கண்டு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள் மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு தமிழக அரசின் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாற்றுத்திறனாளிக்காக சிறப்பாக சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளருக்கு 10 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழும் அளிக்கப்பட உள்ளது.
எனவே இந்த விருதுகளுக்கான விண்ணப்ப படிவங்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து உரிய அனைத்து சான்றிதழ்களை இணைத்து இரண்டு நகல்களை வருகிற 28-ந் தேதி மாலை 5.30 மணிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கமாறும், மேலும் விவரங்களுக்கு 044-29998040 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்கள் அறிந்து கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments