60 ஆண்டுகள் எம்எல்ஏ வாக பதவி வகித்தவர் கருணாநிதி மட்டுமே - அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்
காஞ்சிபுரம், ஜூன் 23:
உலகிலேயே 60 ஆண்டுகள் எம்எல்ஏ வாக பதவி வகித்த பெருமைக்குரியவர் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி மட்டுமே என பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை புகழாரம் சூட்டினார்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியம் மற்றும் பேரூர் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
உத்தரமேரூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் க.சுந்தர் தலைமை வகித்தார். எம்பி க.செல்வம், ஒன்றியச் செயலாளர் ஞானசேகரன், பேரூராட்சி மன்ற தலைவர் பொ.சசிக்குமார், பேரூர் கழக செயலாளர் எஸ்.பாரிவள்ளல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் இலவச தையல் இயந்திரங்கள் 100 பேர்,சலவைப் பெட்டிகள் 10 பேர்,இலவசமாக சேலை வழங்கியது 1500 பேர் ஆகியோருக்கு நலத்திட்ட உதவிகளை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியது.
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி வாழ்ந்த 95 ஆண்டுகளில் 80 ஆண்டுகள் பொது வாழ்க்கை வாழ்ந்தவர். உலகிலேயே 60 ஆண்டுகள் தொடர்ந்து எம்எல்ஏ வாக பதவி வகித்த பெருமைக்குரியவர்.
போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர்.இந்திய வரலாற்றிலேயே தொடர்ந்து 5 முறை முதல்வராக இருந்தவர்.காமராஜர், நல்லகண்ணு போன்ற தலைவர்கள் உட்பட எந்த தலைவரும் கட்சியில் 50 ஆண்டுகள் தலைவராக இருந்ததில்லை. அந்தப் பெருமை கருணாநிதிக்கு உண்டு.
75 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனமும், 21 திரைப்படங்களுக்கு பாடல்களும் எழுதியவர். தனது 11 வது வயதிலேயே நாடகங்கள் எழுதி அதில் நடிக்கவும் செய்தவர்.
அழகிய தமிழ் வார்த்தைகளை திரையுலகில் அறிமுகப் படுத்திய பெருமைக்கும் கருணாநிதிக்கு உண்டு. திரையுலகத்தைக் கூட சமுதாய நலனுக்காகப் பயன்படுத்தியவர்.
சிறந்த பத்திரிக்கையாளர், சிறந்த இலக்கியவாதி, சிறந்த சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்ட கருணாநிதி தான் தமிழகத்தில் முதல்வராக இருந்துள்ளார்.
குடிநீர் வடிகால் வாரியத்தை உருவாக்கி தமிழகம் முழுவதும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கும் கருணாநிதி தான் காரணம் என்றும் எ.வ.வேலு பேசினார்.
No comments
Thank you for your comments