Breaking News

மகளிர் உயர்கல்வி உறுதித் திட்டம் ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ், "மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாம். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்   திருமதி. கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளதாவது, 

உயர் கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவிகளின் சேர்க்கை விகிதம் மிகக் குறைவாக இருப்பதை உணர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி திட்டமானது மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த மாணவிகளின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வீதம் அவர்கள் இளங்கலை பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி (ITI) முடிக்கும் வரை அவரது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் பயனடைய தேவையான தகுதி விவரங்கள்:

இத்திட்டத்தில் கீழ் பதிவு செய்ய https://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கல்லூரி மூலமாக மட்டுமே பதிவு செய்ய இயலும். 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளாக இருத்தல் அவசியம். அரசு பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலும்.

இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் RTE மூலமாக 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை தமிழக தனியார் பள்ளியில் பயின்ற மாணவியர், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றால் இத்திட்டம் மூலம் பயனடைய முடியும். 

கலை, அறிவியல், தொழில் முறை படிப்புகள், துணை மருத்துவம், டிப்ளமோ, ஐடிஐ, இளநிலை மற்றும் முதுநிலை இணைந்த படிப்புகள் ஆகியவற்றில் மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவியருக்கு அப்படிப்புக்கான உதவித் தொகையாக மாதம் ரூ.1000/-  வழங்கப்படும்.

ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவியர் இருந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறலாம். கல்லூரியில் சென்று பயிலும் மாணவியருக்கே இந்த உதவித் தொகை வழங்கப்படும். அஞ்சல் வழிக் கல்வி அல்லது அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலாது.

வேறு திட்டங்களின் கீழ் நிதியுதவி பெறும் மாணவியரும் கூடுதலாக இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலும் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். ஏற்கனவே உயர்கல்வியில் சேர்ந்த மாணவியரும், மீதமிருக்கும் ஆண்டுகளுக்கான படிப்பிற்கு இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். புதுமைப்பெண் குறித்த விவரம் https://kancheepuram.nic.in/ என்ற இணைய முகவரியிலிருந்தும் அறிந்து கொள்ளலாம். 

இடைநிற்றல் இன்றி கல்வி கற்றிட, உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்படும் தமிழக அரசின் இந்த தொலைநோக்கு திட்டத்தினால் தமிழகத்தில் பெண்கள் கல்வியில் சாதனை படைத்து வாழ்வில் உயர்ந்திடும் நிலை உருவாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப.,  அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வெளியீடு:  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.


 

No comments

Thank you for your comments