தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், கோவூர் ஊராட்சியில், இன்று (01.05.2023) தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபை கூட்டம் மாண்புமிகு குரு, சிறு மற்றும் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமப்புறங்களை தூய்மையான சுற்றுச்சூழல் கொண்ட கிராமங்களாக மாற்றவும், வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும், “நம்ம ஊரு சூப்பரு - Namma Ooru Superu’’ பிரச்சாரம் கிராமப்புற சமூகத்தினரிடையே பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நடத்தை மாற்றத்தை (Behavioural changes) கொண்டுவர தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் குறிக்கோள் பாதுகாப்பான சுகாதாரம், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளை (Single Use Plastic - SUP) தடை செய்வது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாதுகாப்பான குடிநீர், திரவக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவை ஆகும்.
நம்ம ஊரு சூப்பரு இரண்டாவது கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே-1 தொடங்கி ஜூன் 15 வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியினை மாண்புமிகு குரு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் கோவூர் ஊராட்சி, மாந்தோப்பு பகுதியில் தூய்மை பணிகளை துவக்கி வைத்தார்.
மேலும் 72 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளி கட்டிடம், 5.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பள்ளி சுகாதார வளாகம் மற்றும் 1.25 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வினை தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களிடம் தீர்மானங்கள் குறித்தும், ஊராட்சி வரவு செலவு கணக்குகள் குறித்தும் தாக்கல் செய்யப்பட்டது. தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், கோவூர் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் நிர்வாக பணிகள் குறித்த பதிவேடு கிராம பொதுமக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது.
கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் அவர்கள் தீர்மானங்களை கிராம பொதுமக்கள் முன்பு வாசித்தார். மேலும் கிராம வளர்ச்சி திட்டம் (VPDP), அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், ஜல்ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் போன்ற திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.
மேலும் மாண்புமிகு குரு, சிறு மற்றும் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பேசியதாவது:-
72 லட்சம் மதிப்பில் கோவூர் ஊராட்சியில் பள்ளி கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பழுதடைந்த தேரினை, 1 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டு, வரும் ஆண்டு தேரோட்டம் நடைபெறும். மேலும் மக்கள் கோரிக்கையை ஏற்று நியாய விலை கடை, அங்கன்வாடி மையம் கட்டப்படும். 4 கோடி மதிப்பில் சாலை பணிகள், வடிகால் பணிகள் மற்றும் 50 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டும் பணிகள் இவ் ஊராட்சியில் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments