Breaking News

3வது முறையாக அமைச்சரவை மாற்றம்... பிடிஆர் உட்பட 4 பேர் இலாகா மாற்றம்

சென்னை : 

புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவி ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அவருக்கான இலாகா ஒதுக்கீட்டு விவரத்தை ஆளுநரின் முதன்மை செயலாளர் அறிவிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டார். 

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றப் பிறகு அவரது அமைச்சரவை மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

ஆட்சிக்கு வந்த பிறகு 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் மாற்றப்பட்டு, அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவருக்கு பதிலாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். 

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மீண்டும் ஒருமுறை தமிழக அமைச்சரவையில் மாற்றம் நடந்தது. இம்முறை பல அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன. கூடுதலாக, உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் சேர்த்து தமிழ்நாடு அமைச்சரவை எண்ணிக்கை 35ஆக உயர்ந்தது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. 

இந்த நிலையில், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில், பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு. நாசர் நீக்கப்பட்டு, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்று காலையில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்றார். பின்னர், அமைச்சர்கள் அனைவரும் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, அமைச்சர் ஒதுக்கப்பட்ட துறைகள் குறித்து அறிவிப்பு வெளியானது.

அதன்படி புதிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் தொழில்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார். 

இதுவரை தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பழனிவேல் தியாகராஜன் வகித்து வந்த நிதி இலாகா வழங்கப்பட்டுள்ளது. மேலும் திட்டம், மனிதவள மேம்பாடு, பென்ஷன், புள்ளியியல் மற்றும் தொல்லியல் துறைகளையும் தங்கம் தென்னரசு கவனிப்பார். அவர் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார். 

செய்தித்துறை அமைச்சராக இருந்த சாமிநாதன் வசம் கூடுதல் இலாகாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர் தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், தகவல், பட தொழில்நுட்பம் உள்ளிட்ட பொறுப்புகளை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இனி செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார். 

பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதித்துறை விலக்கப்பட்டுள்ளது. அவருக்கு தகவல் தொழில் நுட்பம், டிஜிட்டல் சேவை துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவர் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார். 

இதுவரை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜனிடம் இருந்து அந்த துறை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு பால்வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் பால்வளத்துறை அமைச்சராக அழைக்கப்படுவார். 

இவ்வாறு ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


 

No comments

Thank you for your comments