கொள்முதல் மையங்களில் பணம் வசூலித்தால் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுப்பு
காஞ்சிபுரம்
கொள்முதல் மையங்களில் பணம் வசூலித்தால் நடவடிக்கை என்றுமாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் மையங்களில் பணம் வசூலித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவரை பருவத்தில் நெல் சாகுபடி 69,820 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) சார்பாக 103 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) சார்பாக 20 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் ஆக மொத்தம் 123 நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு 4027.240 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் தலையீடு இருப்பதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. இதனால் நெல் விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் ஒருவித அச்ச உணர்வு ஏற்படுகிறது.
இதுபோன்று இடைத்தரகர்கள் தலையிடுவது தெரியவந்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் கண்காணிக்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments