நானும் டெல்டாகாரன் தான்- நிலக்கரி சுரங்க கவன ஈர்ப்பு தீர்மானத்தில் மு.க.ஸ்டாலின் விளக்கம்
சென்னை:
காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த டெல்டா பகுதி விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், இது தொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், நிலக்கரி சுரங்க ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து காவிரி டெல்டா பகுதிகளை விலக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு வெளியிட்ட ஏல அறிவிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதற்குப் பதில் அளித்த தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,
"டெல்டாவில் நிலக்கரி சுரங்க ஏல விவகாரத்தில் முதல்வர் வேகமாக செயல்பட்டு, உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். நிலக்கரி அமைச்சகத்திடம் வலியுறுத்திய அதிகாரிகளும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் எனக் கூறியுள்ளனர். தமிழக அரசு ஒருபோதும் இத்திட்டத்தை அனுமதிக்காது என்பதை திட்டவட்டமாக கூறுகிறோம்." என்றார்.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியவதாது,
நீங்களெல்லாம் இந்தச் செய்தியைக் கேட்டு எப்படி அதிர்ச்சிக்கு ஆளானீர்களோ, நானும் அதே உணர்வோடுதான் அதிர்ச்சிக்கு ஆளானேன். இதுகுறித்த செய்தியைப் பார்த்தவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நான் தொடர்பு கொண்டு பேசி, அதற்குப்பிறகு உடனடியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினேன்.
அதோடு, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கிற காரணத்தால், அங்கே டெல்லியில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்களுக்கு அந்தக் கடிதத்தினுடைய நகலை அனுப்பி, உடனடியாக சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சரைச் சந்தித்து, நம்முடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், நான் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை நீங்கள் அவரிடத்திலே தரவேண்டுமென்று உத்தரவிட்டேன். அவரும் அதற்கான முயற்சியிலே ஈடுபட்டார்.
இங்கே தொழில் துறை அமைச்சர் தெரிவித்ததுபோல, சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர் அவர்கள் வெளியூரில் இருக்கிற காரணத்தால், அவரை நேரில் சந்திக்க இயலாததால், டி.ஆர். பாலு, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
அவருடன் பேசியபோது, “தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் அனுப்பியிருக்கக்கூடிய கடிதத்திற்கு நிச்சயமாக நாங்கள் மதிப்பு அளிப்போம்; கவலைப்பட வேண்டாம்” என்ற ஓர் உத்தரவாதத்தை ஒன்றிய அமைச்சர் சொன்னதாக ஒரு செய்தியை டி.ஆர். பாலு அவர்கள் என்னிடத்திலே தெரிவித்திருக்கிறார்கள்.
ஆகவே, நிச்சயமாக சொல்கிறேன் – முதலமைச்சராக மட்டுமல்ல; நானும் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவன். எனவே, இதிலே நான் உறுதியாக இருப்பேன். நீங்களெல்லாம் எப்படி உறுதியாக இருக்கிறீர்களோ, அதைவிட அதிகமாக, அந்த அளவிற்கு நானும் உறுதியாக இருப்பேன். எந்தக் காரணத்தைக் கொண்டும், அதற்கு நிச்சயமாக நம்முடைய தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது; அளிக்காது; அளிக்காது.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

No comments
Thank you for your comments