Breaking News

தமிழகத்தில் கொரோனா க்ளஸ்டர் பாதிப்பு இல்லை; புதிய திரிபு வீரியம் குறைவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவல் க்ளஸ்டர் பாதிப்பாக இல்லை என்றும் புதிய திரிபின் வீரியம் குறைவாகவே உள்ளது என்றும் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


கொரோனா தொற்றை எதிர்கொள்வது மற்றும் தடுப்பூசி மேலாண்மை குறித்து டாக்டர். மன்சுக் மாண்டவியா மாநில அரசுகளுடன்  07-04-2022 அன்று ஆலோசனை நடத்தினார்.  மாநிலங்கள் விழிப்புடன் இருக்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தயார் நிலையையும் வைத்திருக்கவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார். 

மேலும், 2023-ம் ஆண்டு ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஒத்திகை நடத்தவும்  வலியுறுத்தினார்.  இதையடுத்து, பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தயார் நிலை ஒத்திகை நடத்தப்படும் என்றும் மாநிலங்கள் உறுதியளித்தன.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் உள்ள 11 ஆயிரம் அரசு மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சை கட்டமைப்புகள் தயார் நிலையில் இருக்கிறதா என்பது குறித்த ஆய்வு இன்று நடைபெறுகிறது.

இதன் ஒருபகுதியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, 



"தமிழகத்தில் கொரோனா பாதிப்பு க்ளஸ்டர் பரவலாக இல்லை. தனித்தனியாகவே பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் புதிய திரிபு வீரியம் குறைவாகவே உள்ளது. 

தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவைப்படும் அளவுக்கு பாதிப்பு இல்லை. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று காலையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அன்றாடம் 500 பேருக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. இங்கு 150 படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளது. அதுபோல் பிபிடி கிட்கள், மருந்துகள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

அண்மையில், இன்ஃப்ளூயன்சா தொற்று பெரும் அளவில் பரவியது. இதன் நிமித்தமாக முதல்வர் காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில் இதுவரை 53000க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள். பொதுமக்கள் மத்தியில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டன. 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன" என்றார்.

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 189, பெண்கள் 180 என மொத்தம் 369 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 113, செங்கல்பட்டில் 37, திருவள்ளூர் மாவட்டத்தில் 19 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், விமானம் மூலம் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 172 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். தமிழகம் முழுவதும் 1,703 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று உயிரிழப்பு இல்லை

No comments

Thank you for your comments