Breaking News

நடிகை யாஷிகா ஆனந்துக்கு பிடிவாரன்ட் - செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு

செங்கல்பட்டு: 

கடந்த 2021-ம் ஆண்டு மகாபலிபுரம் அருகே நிகழ்ந்த கார் விபத்து வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்துக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 24 அன்று இரவு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் தனது தோழிகளுடன் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மகாபலிபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதிக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷிகாவுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த விபத்து குறித்து மகாபலிபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணைக்காக மார்ச் 21-ம் தேதி ஆஜராக யாஷிகாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை.

இந்த வழக்கு செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, யாஷிகா ஆனந்த் வரும் 25-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். 

ஆஜராக தவறும்பட்சத்தில் அவரை காவல் துறையினர் கைது செய்ய பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

No comments

Thank you for your comments