காஞ்சிபுரத்தில் வெடி விபத்து நடந்த இடத்தில் மாநில மனித உரிமை ஆணைய நீதிபதிகள் நேரில் ஆய்வு
காஞ்சிபுரம், மார்ச் 25 -
காஞ்சிபுரம் அருகே வளத்தோட்டம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நடந்த இடத்தினை மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் நீதிபதிகள் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதி வளத்தோட்டம் கிராமத்தில் கடந்த 22 ஆம் தேதி பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.18 பேர் காயம் அடைந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும் நீதிபதியுமான எஸ்.பாஸ்கரன் மற்றும் ஆணைய உறுப்பினர்களும், நீதிபதிகளாகவும் இருந்து வரும் ராஜா இளங்கோ, கண்ணதாசன் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி,எஸ்.பி எம்.சுதாகர்,மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா,கோட்டாட்சியர் கனிமொழி,மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆர்னிஷா பிரியதர்ஷினி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் வினோத்சாந்தாராம்,பாலகுமார்,காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் ஆகியோரும் உடன் வந்திருந்து நீதிபதிகளுக்கு விபத்து நடந்த விதங்கள்,மீட்பு பணி விபரங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
வெடிவிபத்து நடந்த இடத்தில் ஆய்வுக்கு பின்னர் நீதிபதியும்,மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினருமான கண்ணதாசன் கூறியது..
காஞ்சிபுரம் வெடி விபத்து சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.பலர் காயம் அடைந்துள்ளனர்.இது போன்ற விபத்துகள் இனி நடக்கவே கூடாது என்பதற்காக நேரில் ஆய்வு செய்தோம்.விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். உயிர்ப்பலிகள் ஏற்றுக்கொள்ள முடியாதது.
விபத்து நடந்தவுடன் ஆட்சியரும், எஸ்பி யும் உடனடியாக வந்து மீட்பு பணிகளை முடுக்கி ஓரளவு உயிர்களை காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்திருப்பதும் பாராட்டுக்குரியது.
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்திலும் அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி இனி வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்கத் தேவையான ஆலோசனைகளையும் பெற்றிருக்கிறோம்.ஆய்வு அறிக்கையை விரைவில் அரசுக்கு தெரிவிப்போம் எனவும் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்தார்.





No comments
Thank you for your comments