கோடை எதிரொலி... காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பக்தர்களுக்கு மோர் வழங்கல்
காஞ்சிபுரம், மார்ச் 18:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வெயில்காலத்தையொட்டி தாகம் தணிக்கும் விதமாக பக்தர்களுக்கு தினசரி காலையில் மோர் வழங்கப்பட்டு வருவதாக கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர் எம்.வி.எம்.வேல்மோகன் சனிக்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது... பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக இருந்து வருவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாத சுவாமி திருக்கோயில். இக்கோயிலுக்கு தினசரி ஏராளமான வெளிமாநில,வெளி மாவட்ட பக்தர்கள் அதிக அளவில் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
வெயில் காலமாக இருப்பதால் பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களது வேண்டுகோளின்படி நிகழ் மாதம் 6 ஆம் தேதி முதல் தினசரி காலையில் பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டு வருகிறது.வெயில் காலம் முடியும் வரை ஆலயத்தில் மோர் வழங்குவது தொடரும்.
திருக்கோயில் கோசாலையில் உள்ள பசுமாட்டிலிருந்து கறக்கும் சுத்தமான பாலானது சுவாமிக்கு தினசரி அபிஷேகத்துக்கும், அன்னதானம் மற்றும் மோர் வழங்குவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சுத்தமான பசும்பாலில் மோர் வழங்கப்படுவதால் பக்தர்கள் தாகத்தை தீர்த்திட மோர் அருந்தி செல்லுமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்றார். சனிக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி ஏகாம்பரநாதர் கோயிலுக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகளும் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் பொய்யானேந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கல்விச்சுற்றுலாவாக வந்து சுவாமிதரிசனம் செய்ததுடன் அனைவருக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் மோர் வழங்கப்பட்டது.
பேட்டியின் போது திருக்கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெகன்னாதன்,விஜயகுமார் மற்றும் கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி ஆகியோரும் உடன் இருந்தனர்.
படவிளக்கம்}வெயில் காலம் தொடங்கியதையொட்டி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் வழங்கப்பட்ட மோரை பெற்றுக்கொள்ள வரிசையில் வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ,மாணவியர்

No comments
Thank you for your comments