காஞ்சிபுரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்,ஒரே நாளில் 396 பேருக்கு பணி நியமன ஆணை
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு நிறுவனங்களுக்காக 396 பேர் ஒரே நாளில் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்தார்.
மாவட்ட வேலைவாய்ப்புத்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் மகளிர் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்தினர். முகாமை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார்.
வேலைவாய்ப்புத்துறையின் மண்டல இணை இயக்குநர் ஏ.ஜோதிமணி, பச்சையப்பன் ஆடவர் கல்லூரி முதல்வர் ப.முருகக்கூத்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை இயக்குநர் ஆர்.அருணகிரி வரவேற்று பேசினார்.
முகாமில் வேலையளிக்கும் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் என்ன வேலை, எவ்வளவு சம்பளம் மற்றும் வேலையில் சேருவோருக்கு என்னென்ன வசதிகள் உள்ளன என்ற விபரங்கள் அடங்கிய பெரிய விளம்பர பதாகை வேலைவாய்ப்புத் துறை மூலம் வைக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு வேலையளிக்கும் நிறுவனங்களுக்கும் தனித்தனியாக அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.
முகாம் நிறைவில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி கூறியதாவது..
படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு அதிகமான அளவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் பொருட்டு அரசின் பல்வேறு துறைகளும் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறோம்.
நடைபெற்ற முகாமில் வேலையளிக்கும் 147 தனியார் நிறுவனங்களும்,2203 வேலைநாடுநர்களும் பங்கேற்றிருந்தனர்.
இவர்களில் ஒரே நாளில் 396 பேருக்கு பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிய பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்கிறோம். இது தவிர மேலும் 400 பேர் பல்வேறு நிறுவனங்களில் பணி செய்வதற்காக முதற்கட்டமாக மட்டும் தேர்வு செய்யப் பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


No comments
Thank you for your comments