Breaking News

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை: சூரத் நீதிமன்றம் தீர்ப்பு

சூரத்:

 கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 பிணையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. அதற்குள் அவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.

வழக்கு பின்னணி என்ன?: 

முன்னதாக, காங்கிரஸ் முக்கியத் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி மீது, சூரத்தின் பாஜக எம்எல்ஏ பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, "எல்லா திருடர்களுக்கும் எப்படி மோடி என்பது பொதுவான குடும்பப்பெயராக இருக்கிறது?" என்று பேசியிருந்தார். இதன்மூலம் அவர் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமானப்படுத்தியுள்ளார் என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

நான்காண்டுகள் பழமையான இந்த அவதூறு வழக்கின் இருதரப்பு வாதங்களையும் கடந்த வாரத்தில் கேட்டு முடித்திருந்த தலைமை நீதித்துறை நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மா, தீர்ப்பை இன்று (மார்ச் 23 ஆம் தேதிக்கு) ஒத்திவைத்திருந்தார்.

இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இதற்காக ராகுல் காந்தி காலையிலேயே சூரத் நகரத்திற்கு வந்திருந்தார். தீர்ப்பு வழங்கப்பட்ட போது அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். இதற்கு முன்பு, தன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499, 500 கீழ் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் வாக்குமூலம் அளிப்பதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு சூரத் நீதிமன்றத்தில் ராகுல் ஆஜராகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பூர்னேஷ் மோடி, ராகுல் காந்தி ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமதித்து விட்டார் என்று அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் தீர்ப்புக்கு பின்னர் அதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, 

"எனது மதம் உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. உண்மையே எனது மதம், அகிம்சையே அதனை அடைவதற்கான பாதை" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் ராகுலின் சகோதரியுமான பிரியங்கா காந்தி வரோதா, 

"பயந்து போன அனைத்து அரசு எந்திரங்களும், தண்டனை, பாரபட்சம் போன்றவைகளைத் திணிப்பதன் மூலம் ராகுல் காந்தியின் குரலை நசுக்கப் பார்க்கின்றன. எனது சகோதரன் ஒரு போதும் பயப்பட மாட்டான். அவன் உண்மையைப் பேசி வாழ்பவன், தொடர்ந்து உண்மையை மட்டுமே பேசுவான். அவன் தொடர்ந்து இந்த நாட்டு மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டே இருப்பான். உண்மையின் சக்தியும், நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் அன்பும் அவனுடன் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளை ஒழிக்க சதி - அரவிந்த் கேஜ்ரிவால் ஆவேசம்

எதிர்க்கட்சித் தலைவர்களை ஒழிக்க செய்யும் சதி என்று தீர்ப்பு குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "எதிர்க்கட்சிகளையும் அதன் தலைவர்களையும் ஒழிக்க சதி நடந்து கொண்டிருக்கிறது. பாஜக அல்லாத தலைவர்கள் மீது வழக்கு பதிய சதி நடந்து கொண்டிருக்கிறது. ராகுல் காந்தியுடன் எனக்கு கருத்துவேறுபாடுகள் உண்டு. ஆனால் ஒரு அவதூறு வழக்கில் அவரைச் சிக்க வைப்பது முறையில்லை. நான் நீதிமன்றத்தை மதிக்கிறேன். ஆனால் தீர்ப்பை ஏற்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments