Breaking News

நரிகுறவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விற்பனை நிலையத்தினை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (08.02.2023) காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பெரும்புதூர் பேருந்து நிலையத்தில் நரிகுறவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விற்பனை நிலையத்தினை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், நெமிலி ஊராட்சியிலுள்ள நரிக்குறவர்கள் இன மக்களின் வாழ்வாதாரம் சிறக்க நரிகுறவர் இன சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு, அக்குழுக்களுக்கு பட்டு  நூலினால் ஆன ஆபரணங்கள் செய்ய தனியார் நிறுவனங்கள் மூலமாக 30 நரிகுறவர்கள் இன சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் நபார்டு வங்கி மற்றும் ரீட்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பட்டு நூலினால் ஆன வளையல்கள் மற்றும் ஆபரணங்கள் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது.  நரிக்குறவர் இன சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய திருப்பெரும்புதூர் ஊராட்சி பேருந்து நிலையத்தில் வணிக வளாக கடை எண் 2-ஐ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை இந்த கடையில் வைத்து விற்பனை செய்து கொள்ள அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளன.

இக்கடையில் ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் உள்புற அலங்காரம் செய்ய  பணி செய்து முடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கூட்டுறவு துறை மூலமாக துணி நூலும், கைத்தறி அலுவலகம் மூலமாக கழிவு பட்டு நூலும்  இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேற்று மாநிலங்கள் மற்றும் வேறு மாவட்டங்களில் நடைபெறும் சாராஸ் கண்காட்சிகளில் நரிக்குறவர்கள் உற்பத்தி செய்யும் ஆபரணங்கள் விற்பனை செய்யப்பட்டு நரிக்குறவர்களின் வாழ்வாதாரம் சிறக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

இவ்விற்பனை மையத்தை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துக் கொண்டு குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியின்போது குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.செல்வப்பெருந்தகை, உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், மற்றும் அரசு அலுவலர்கள், சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments