அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கீழடி அகழாய்வை கண் முன்னே காட்சிபடுத்திய கண்காட்சி..!
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தில் உள்ள அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாபெரும் அறிவியல் கண்காட்சியில் தமிழர்களின் தாய்மடி என அழைக்கப்படும் கீழடி அகழாய்வை தத்ரூபமாக வடிவமைத்து மாணவர்கள் காட்சிப்படுத்தியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
காஞ்சிபுரம் மாவட்டம்,வாலாஜாபாத் நகரில் இயங்கி வரும் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வருடம்தோறும் பிப்ரவரி மாதமானது அறிவியல் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு 30-ம் ஆண்டு நிறைவை ஒட்டி பள்ளியின் முத்து விழாவாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக மாணவ மாணவிகளால் மாபெரும் சிறப்பு அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.
இக்கண்காட்சியினை காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் துவக்கி வைத்தார்.
இதில் நீர் மேலாண்மை, தீ விபத்து பாதுகாப்பு, வரலாற்று அதிசயங்கள் குறித்த விஞ்ஞான உண்மைகள்,மனித விலங்குகளின் பரிமாண வளர்ச்சி முறைகள், ஊட்டச்சத்து உணவுகள் என பல தலைப்புகளின் கீழ் கண்காட்சியை செயல்விளக்கத்துடன் காட்சிப் படுத்தியது அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் வகையில் சிறப்பாக அமைந்திருந்தது.
இக்கண்காட்சியில் "கீழடி தமிழனின் வேரைத்தேடி" என்ற தலைப்பில் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட கண்டெடுப்புகளின் மாதிரிகளை மாணவ மாணவிகளே தங்கள் கைப்பட தத்ரூபமாக உருவகப்படுத்தி காட்சிப்படுத்தியது கீழடிக்கே நேரடியாக சென்று பார்த்த அனுபவம் கிடைத்ததாக அனைவரும் வியந்து பாராட்டினர்.
தஞ்சை பெரிய கோயிலில் இவ்வளவு அதிசயங்களா..
மேலும் தஞ்சை கோயில் குறித்த வடிவமைப்பு உருவாக்கி தமிழர்களின் கட்டிடக் கலை நுட்ப அதிசயங்கள் தெரிந்தது தெரியாதவை என பொதுமக்களுக்கு விளக்கி கூறியது பெரும் வரவேற்பு பெற்றது.
இக்கோயிலின் 12 அடியில் உயரம் அமைந்துள்ள நந்தியம் பெருமான் தமிழ் மெய் எழுத்துக்களின் எண்ணிக்கையும் , சிவலிங்க பீட அமைப்பு 18 அடி உயிர் எழுத்துகளையும், கோயில் கோபுர உயரம் 216 அடி எனவும் இது தமிழ் எழுத்துக்கள் எண்ணிக்கையை குறிப்பதாகவும், சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 248 அடி உள்ளது தமிழ் எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை குறிப்பதாக அமைந்துள்ளதையும் குறிப்பிட்டனர்.



No comments
Thank you for your comments