காஞ்சிபுரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை பேரணி
காஞ்சிபுரம் :
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.
காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஒய்.சீதாராமன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
பேரணிக்கு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.லெனின் தலைமை வகித்தார். சங்க மாவட்ட துணைத் தலைவர்கள் தி.ரமேஷ், வி.முத்துசுந்தரம், சீதா மற்றும் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்க சங்க மாவட்ட செயலாளர் டி.மருதன் பேசினார்.
தமிழக அரசுத்துறைகளில் காலியாகவுள்ள 6 லட்சம் காலிப்பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும், தமிழக அரசின் காலை சிற்றுண்டித் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாகவே செயல்படுத்திட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் அமல்படுத்திட வேண்டும், காலமுறை ஊதியம் மற்றும் தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களை பணி நிரந்தரப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
பேரணி ரங்கசாமி குளத்திலிருந்து தொடங்கி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலான் கேட் பகுதியில் வந்து நிறைவு பெற்றது.நிறைவுரையாக தமிழ்நாடு மாநகராட்சி பணியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.தாமோதரன் பேசினார். மாவட்டப் பொருளாளர் வி.குமார் நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments