காஞ்சிபுரம் அருகே கூரத்தாழ்வார் கோயிலில் தேரோட்டம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமத்தில் அமைந்துள்ள கூரத்தாழ்வார் கோயிலில் வியாழக்கிழமை உற்சவர் கூரத்தாழ்வார் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமத்தில் பழமையும்,வரலாற்றுச் சிறப்பும் மிக்க ஆதிகேசவப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.இக்கோயில் வளாகத்தில் உள்ள கூரத்தாழ்வார் சந்நிதியில் ஆண்டு தோறும் தை மாதம் கூரத்தாழ்வார் திருஅவதார மகோத்சவம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
நிகழாண்டு கூரத்தாழ்வாரின் 1013வது திரு அவதார மகோத்சவம் நிகழ் மாதம் 1 ஆம் தேதி தொடங்கியது.இதனையொட்டி காலையில் கூரத்தாழ்வார் பல்லக்கிலும், மாலையில் வெவ்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தருளினார்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 9 ஆம் நாள் நிகழ்வாக உற்சவர் கூரத்தாழ்வார் அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் கூரம் கிராமத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்து கோயில் நிலைக்கு வந்து சேர்ந்தார்.
மாலையில் ஹம்ச வாகனத்தில் கூரத்தாழ்வார் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தையொட்டி கிராமத்தில் பல்வேறு இடங்களில் நீர்,மோர் மற்றும் அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன.
No comments
Thank you for your comments