புதுமைப்பெண் திட்டத்தில் 12 ஆயிரம் மாணவியர் பள்ளி இடைநிற்றலை தவிர்த்துள்ளனர் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
காஞ்சிபுரம் :
புதுமைப்பெண் திட்டத்தால் தமிழகத்தில் மொத்தம் 12 ஆயிரம் மாணவியர் பள்ளி இடைநிற்றலை தவிர்த்திருப்பதாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை காஞ்சிபுரத்தில் பேசினார்.
காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் உள்ள மீனாட்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கலையரங்கில் புதுமைப் பெண் திட்டத்தை தொடக்கி வைக்கும் வகையில் கல்லூரி மாணவியருக்கு வங்கியின் பற்று அட்டைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பேசியது..
மாணவியர் படிப்பை பாதியில் நிறுத்தி விடாமல் இருக்கவும்,கல்வியிலும்,பொருளாதாரத்திலும் சிறந்து விளங்கவும் புதுமைப்பெண் திட்டம் அரசால் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தால் தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரம் மாணவியர் பள்ளி இடைநிற்றலை தவிர்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசால் பெண்களுக்காக பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், இலவச பேருந்து பயணம், கர்ப்ப காலத்தில் 12 மாத விடுப்பு, கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.18 ஆயிரம் வரை உதவித்தொகை, மகளிர் சுய உதவிக் குழுக்களின் நகைக்கடன்கள் 2464 கோடி வரை தள்ளுபடி செய்தது, அரசுப்பணிகளில் 40 சதவிகித இட ஒதுக்கீடு இப்படியாக பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் அரசாக தமிழக அரசு இருந்து வருகிறது.
புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு உயர்கல்வியிலும் பெண்களின் சேர்க்கை அதிகரித்திருக்கிறது. சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று பெண்களுக்காக முதலில் குரல் கொடுத்ததும் திமுக அரசு தான் என்பதை மறந்து விடக்கூடாது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டம் மூலமாக முதற்கட்டமாக 65 கல்லூரிகளில் பயிலும் 3917 பேருக்கு ரூ.1.55 கோடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 2 வது கட்டமாக 1341 பேருக்கு பற்று அட்டை வழங்கப்படுகிறது. அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மண்ணில் புதுமைப்பெண் திட்டத்தை தொடக்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன் என்று பேசினார்.
விழாவிற்கு காஞ்சிபுரம் ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமை வகித்தார். தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன், விளையாட்டுத்துறையின் செயலாளர் மேகநாதரெட்டி, எம்பி க.செல்வம், எம்எல்ஏ க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி வரவேற்று பேசினார்.
விழாவில் எஸ்பி எம்.சுதாகர், காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட ஊராட்சிக் குழுவின் தலைவர் படப்பை ஆ.மனோகரன், துணைத் தலைவர் நித்யா சுகுமார், ஒன்றியக்குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார், மீனாட்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தலைவர் கோமதி ராதாகிருஷ்ணன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
No comments
Thank you for your comments