Breaking News

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. காங்கிரஸ் வேட்பாளர் யார்? - கடும் போட்டி... பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆலோசனை

 சென்னை, ஜன.22-

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் தனித்தனியாக இந்த ஆலோசனை நடைபெற்றது. வேட்பாளர் தேர்வில் கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் வேட்பாளர் குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்


ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்.27ம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன.



அத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் அளித்தப் பேட்டியில்,

 "ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை. இளைஞர்கள் வர வேண்டும். எனது குடும்பத்தில் இருந்து வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கட்சி விரும்பினால், இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு தருமாறு கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளேன். வேறு சிலரும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சத்தியமூர்த்தி பவனில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் இரண்டாவது நாளாக இன்றும் ஆலோசனை நடத்தினார். 



ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத்திடம் நேரில் கருத்து கேட்டார். அவருடன் இளங்கோவன், விஷ்ணு பிரசாத் எம்.பி., ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜனும் கலந்து கொண்டார். 

பின்னர் சஞ்சய் சம்பத் ஈரோடு தொகுதியில் போட்டியிட தினேஷ் குண்டுராவிடம் விருப்ப மனு கொடுத்தார். ஈரோடு மாவட்ட தலைவர் மக்கள் ராஜனும் தனக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதைதொடர்ந்து, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-  

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது கட்சி மேலிடம் முடிவு செய்யும். காங்கிரஸ் வேட்பாளர் குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். எதிரணியில் உள்ளவர்கள் யார் போட்டியிடுகிறார்கள் என்பதே இன்னும் தெரியவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் நிச்சயம் வெற்றிபெறும்.  

இடைத்தேர்தல் என்பதால் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பிரசாரத்திற்கு வர வாய்ப்பு இல்லை காங்கிரஸ் நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்வார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- 



ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்பப்படுகிறேன், என்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளேன். வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும் என்றார்.

சென்னையில் காங். ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் ஈரோடு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எனக்கு கட்டாயமாக வேட்பாளராக போட்டியிட இடம் வேண்டும் என்று கேட்டுள்ளேன். தமிழக காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடம் நான் என்னுடைய கோரிக்கையை அளித்துள்ளேன். உழைத்தவர்களுக்கு கண்டிப்பாக இடம் அளிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். எனது கோரிக்கையை பரிசீலிப்பதாக தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்பில் புகார் கொடுத்த சவுக்கு சங்கர்

No comments

Thank you for your comments